கட்டுரைகள் பொதுவானவை

சார ஜோதிட கட்டுரைகள்

பாவத் தொடர்பு என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தின் தனித்தன்மையை நிர்ணயிப்பது அந்த ஜாதகத்தின் 12 பாவ ஆரம்பமுனைகள் தான் என்பதை வாசகர்கள் நன்கு அறிவீர்கள். ஒரு பாவத்தின் ஆரம்பமுனை (CUSP) அந்த பாவத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகின்றது. அந்த பாவத்தின் நுழைவு வாயில் வழியாக சென்று தான் அந்த பாவத்தின் விதியை (கொடுப்பினை) நிர்ணயம் செய்யவேண்டும்.

ஒரு பாவத்தின் ஆரம்பமுனை என்பது அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதி, உபஉபநட்சத்திர அதிபதி என குறுகிக் கொண்டே செல்கின்றது. இதில் பாவ உபநட்சத்திர அதிபதியே அந்த பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிக்கும் வலிமையை அதிகம் பெறுகின்றார். அடுத்து அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதி அடுத்த நிலையில் அந்த பாவ பலனை நிர்ணயிக்கும் ஆற்றலை பெறுகின்றார். கடைசி நிலையில் தான் அந்த பாவ நட்சத்திர அதிபதி அந்த பாவ பலனை நிர்ணயிக்கும் ஆற்றலை பெறுகின்றார்.

அதாவது இங்கு பாவ நட்சத்திரம் தசையாகவும், பாவ உபநட்சத்திரம் புத்தியாகவும், பாவ உபஉப நட்சத்திரம் அந்தரமாகவும், செயல்பட்டு அந்த பாவ பலனின் கொடுப்பினையை நிர்ணயம் செய்யும். தசா,புத்தி,அந்தரம் என்ற மூன்றில் ஒரு சம்பவத்தினை எடுத்து நடந்தும் ஆற்றல் புத்திநாதனை பொருத்தே அமையும். தசா என்பது நீண்ட காலம் என்பதால் அது பொதுத் தன்மை கொண்டதாக அமைவதாலும், அந்தரம் என்பது குறுகிய காலம் (கால பற்றாக்குறை) என்பதால் புத்திநாதனால் மட்டுமே தனது காலத்தில் ஒரு சம்பவத்தினை தொடங்கி வைக்கவும், தனது காலத்திலேயே அந்த சம்பவத்தினை நிறைவேற்றவும் முடியும்.

இதனால் தான் தசா,புத்தி,அந்தரம் என்பதில் புத்திக்கு மட்டும் புத்தி (அறிவு) என பெயரிட்டு அதன் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் சூட்சமமாக நமக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிக்கும் வலிமை அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதிக்கு 6௦ சதவிகித பங்கும், அந்த பாவத்தின் உபஉபநட்சத்திர அதிபதிக்கு 25 சதவிகித பங்கும், அந்த பாவ நட்சத்திர அதிபதிக்கு 15 சதவிகித பங்கும் இருக்கலாம் என்பது அடியேனின் கருத்து. (ஜோதிட அறிஞர்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டுகின்றேன்)

எனவே ஒரு பாவத்தின் கொடுப்பினையை முழுவதுமாக அறிந்து கொள்ள அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதி, உபஉபநட்சத்திர அதிபதி ஆகிய 3 கிரகங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே அந்த பாவத்தின் கொடுப்பினையை 1௦௦ சதவிகிதம் சரியாக நிர்ணயம் செய்ய முடியும்.

அதே நேரத்தில் மேற்கண்ட இந்த 3 கிரகங்களும் அந்த பாவத்திற்கு ஒரே மாதிரியான பலனை தர பெரும்பாலும் வாய்ப்பு குறைவு. அதாவது அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதியாக உள்ள 2 கிரகங்களும் அந்த பாவத்திற்கு பாதகமான பலனை தரும் நிலையில் உள்ளதாக கொள்வோம்.

ஆனால் அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதி, அந்த பாவத்திற்கு மிகவும் சாதகமான பலனை தரும் நிலையில் இருந்தால் அந்த பாவத்திற்கு 6௦ சதவிகித சாதகமான பலனும், 6௦ சதவிகித (15+25) பாதகமான பலனும், நடைபெறும் என்றாலும் கூட இங்கு சாதகமான பலனையே அந்த பாவம் மூலம் ஜாதகர் வாழ்வில் பெரும்பகுதி அனுபவிக்க முடியும்.

ஒரு வேளை அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி அந்த பாவத்திற்கு சாதக நிலையில் இருப்பதாகவும், அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதி, அந்த பாவத்திற்கு பாதக நிலையில் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதி அந்த பாவத்திற்கு சாதக நிலையில் இருந்தால் ஜாதகர் அந்த பாவ பலனை 75 சதவிகிதம் (6௦+15) சாதகமாகவும், 25 சதவிகிதம் பாதகமாகவும் வாழ்நாளில் அனுபவிப்பார்.

புள்ளியியல் நோக்கில் பார்க்கும் போது ஒரு பாவத்தின் நட்சத்திர அதிபதி, உபஉபநட்சத்திர அதிபதி ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதற்கு வாய்ப்பு சற்று குறைவு. அதாவது 2 கிரகங்களும் அந்த பாவத்திற்கு சாதகமாக (அல்லது) பாதகமாக இருப்பதற்கு வாய்ப்பு சற்று குறைவு.

எனவே ஒரு குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை பெருமளவு நிர்ணயிக்கும் ஆற்றலை அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் எதுவோ அதுவே பெறும்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவ ஆரம்பமுனையின் உபநட்சத்திர அதிபதி, தான் நின்ற நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகள் மூலம் சில பாவமுனைகளைத் தொடர்பு கொண்டு தன்னுடைய பாவத்திற்கு நன்மையையோ அல்லது தீமையையோ அல்லது மத்திம பலனையோ தருகின்றது. இது அந்த பாவத்தின் கொடுப்பினை அதாவது விதியாக அமைகின்றது. இதைதான் பாவதொடர்பு என்று கூறுகின்றோம்.

மேலும் இனிவரும் கட்டுரைகளில் பாவத்தொடர்பு என்றாலே பாவ உபநட்சத்திரத் தொடர்பு என்று பொருள் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பாவத் தொடர்புகளில் இரண்டு விதமான விளைவுகள் உள்ளன. அவை 1. தன் பாவ விளைவு அல்லது அக விளைவு 2. பிற பாவ விளைவு அல்லது புற விளைவு.

1. தன் பாவ விளைவு

ஒரு குறிப்பிட்ட பாவமுனையின் உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம்,உபநட்சத்திரம் மூலம் வேறு சில பாவமுனைகளுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய பாவத்திற்கு நன்மையையோ அல்லது தீமையையோ அல்லது நடுநிலை பலனையோ செய்கின்றது.

இதை தான் அந்த குறிப்பிட்ட பாவத்தின் விதி என்கின்றோம். இங்கு ஆய்வுக்கு எடுத்து கொண்ட பாவமுனையின் உபநட்சத்திர அதிபதியை கொண்டு அதனுடைய பாவத்திற்கு மட்டும் தரும் இத்தகைய விளைவு தன் பாவ விளைவு அல்லது அக விளைவு என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எதுவோ, அவைகளின் அதிபதிகள் செய்ய வேண்டிய வேலையை செய்ய கடமைப்பட்டிருக்கின்றது. இதை இன்னும் தெளிவாக கூறினால், ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எதுவோ அதை போலவே தன்னை மாற்றி கொள்கின்றது.

அவ்வாறு மாற்றிக் கொள்ளும் போது மேற்கண்ட கிரகம் நின்ற நட்சத்திரமும் உபநட்சத்திரமும், அந்த கிரகம் வைத்திருக்கும் பாவத்திற்கு சாதக அல்லது பாதக பலனை தரும். அதாவது நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரம், அந்த கிரகம் வைத்திருக்கும் பாவத்திற்கு சாதகமான பாவங்களின் உபநட்சத்திரமாக (அல்லது உபஉபநட்சத்திரமாகவோ, நட்சத்திரமாகவோ) அமையும் பட்சத்தில், தனது பாவபலனை மேம்படுத்தி கொண்டு, தனது பாவ காரகங்களை அந்த கிரகம் சிறப்பாக செயல்படுத்தி, வாழ்நாள் முழுவதும் ஜாதகர் நீடித்த நிலையில் அந்த பாவபலனை அனுபவிக்க பெரிதும் உதவி புரியும்.

இதில் அந்த கிரகம் நின்ற நட்சத்திரம் சம்பவத்தையும், அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம், நட்சத்திரம் காட்டிய சம்பவத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது நட்சத்திரம் காட்டிய சம்பவத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதா என்பதையும் நிர்ணயம் செய்யும்.

இங்கு ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ஒரு பாவமுனையின் உபநட்சத்திர அதிபதி எனில், அந்த கிரகம் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் இரண்டும் ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்தின் பாவத்திற்கு பின்வருமாறு விளைவுகளை தரும்.

மேற்கண்ட கிரகத்தின் பாவத்திற்கு, அது நின்ற நட்சத்திரம் ஒரு பலனையும் (சாதக,பாதக), அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம் ஒரு பலனையும் தரும். இதை நான்கு விதமான விதிகள் மூலம் விளக்குகின்றேன்.

விதி 1

ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்தின் பாவத்திற்கு, அது நின்ற நட்சத்திரம் சாதக பலனும், அது நின்ற உபநட்சத்திரம் பாதக பலனையும் தரும் நிலையில் இருந்தால் ஏற்படும் விளைவுகள் பின்வருமாறு:-

மேற்கண்ட கிரகத்தின் பாவ பலனை ஆரம்பத்தில் சில காலம் சிறப்பாக அனுபவித்தாலும் பின்பு அந்த பாவ பலனை தொடர்ந்து சிறப்பாக அனுபவிக்க முடியாது. அதாவது மேலே குறிப்பிட்ட பாவ பலனை நீடித்த நிலையில் அனுபவிக்க முடியாது.

இதனை ஒரு உதாரணத்துடன் விளக்குகின்றேன்.

சனி என்ற கிரகம் 2ம் பாவ முனையின் உபநட்சத்திரம் எனக் கொள்க. சனி, புதன் சாரம், குருவின் உபநட்சத்திரம் எனக் கொள்க. புதன் 6ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதியாகவும், குரு 9ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதியாகவும் கொள்க.

அதாவது

கிரகம்
நட்ச அதிபதி
உபநட்ச அதிபதி
சனி
புதன்
குரு
2
6
9


இங்கு 2ம் பாவத்திற்கு 6ம் பாவம், 5ம் பாவமாக இருப்பதால் 2ம் பாவத்திற்கு சாதகமான நிலையையும், (ஜாதகரின் தன் நிலையை உயர்த்தும்) அதே நேரத்தில் 2ம் பாவத்திற்கு 9ம் பாவம், 8ம் பாவமாக வருவதால் 2ம் பாவத்திற்கு பாதகமான நிலையையும் தரும். அதாவது ஜாதகர் சம்பாதித்ததை எல்லாம் ஊதாரித்தனமாக செலவு செய்ய நேரிடும்.

அதே நேரத்தில் சனி நின்ற நட்சத்திரம் காட்டிய 6ம் பாவத்திற்கு, சனி நின்ற உபநட்சத்திரம் காட்டிய 9ம் பாவம், 4ம் பாவமாக வந்து 6ம் பாவ பலன் தொடர்வதை தடுத்து நிறுத்தி விடும். இதுவும் ஒரு வகையில் 2ம் பாவ பலன்கள் தொடர்ந்து சாதகமான நிலையில் நடைபெற்று கொண்டிருப்பதை தடுக்கின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

விதி 2

ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்தின் பாவத்திற்கு, அது நின்ற நட்சத்திரம் பாதக பலனும் நட்சத்திரம் பாதக பலனும் அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம் சாதக பலனையும் தரும் நிலையில் இருந்தால் ஏற்படும் விளைவுகள் பின்வருமாறு:-

மேற்கண்ட கிரகத்தின் பாவ பலனை ஆரம்பத்தில் சில காலம் சிறப்பாக அனுபவிக்க முடியாவிட்டாலும் கூட, பின்பு சிறப்பாக தொடர்ந்து அந்த பாவ பலனை ஜாதகர் அனுபவிப்பார். அதாவது மேலே குறிப்பிட்ட பாவ பலனை சில தடைகளுக்கு பிறகு ஜாதகரால் நீடித்து அனுபவிக்க முடியும்.

இதனை ஒரு உதாரணத்துடன் விளக்குகின்றேன். விதி 1ல் குறிப்பிட்ட அதே உதாரணத்தை சற்று மாற்றி இங்கு குறிப்பிடுகின்றேன். வாசகர்களை கவனிக்க வேண்டுகின்றேன்.

கிரகம்
நட்ச அதிபதி
உபநட்ச அதிபதி
சனி
குரு
புதன்
2
9
6


இங்கு 2ம் பாவத்திற்கு 9ம் பாவம், 8ம் பாவமாக வருவதால் 2ம் பாவத்திற்கு பாதகமான நிலையை தரும். அதாவது ஜாதகர் தனது கையிருப்பு பணத்தை சரியாக சேமிக்க திணறுவதையும் தனது பணத்தை மற்றவர்களுக்கு தானமாக தருவதையும், ஊதாரித்தனமாக இருப்பதையும் இங்கு நட்சத்திரம் காட்டுகின்றது.

அதே நேரத்தில் 2ம் பாவத்திற்கு 6ம் பாவம், 5ம் பாவமாக வருவதால் ஜாதகரின் கையிருப்பு பணம் அதிகரிப்பதையும் குறிக்கும். மேலும் சனி நின்ற நட்சத்திரம் காட்டிய 9ம் பாவத்திற்கு, சனி நின்ற உபநட்சத்திரம் காட்டிய 6ம் பாவம், 1௦ம் பாவமாக வந்து 9ம் பாவ பலன்களை உபநட்சத்திரம் போராடி தடுத்து நிறுத்தி விடுகின்றது.

மேற்கண்ட செயலும் ஒரு வகையில் 2ம் பாவ பலன் சிறக்க உதவுகின்றது என்பதை வாசகர்களை கவனிக்க வேண்டுகின்றேன்.


குறிப்பாக நட்சத்திரம் வைத்திருக்கும் பாவத்திற்கு உபநட்சத்திரம் 8,12ம் பாவத்தை வைத்திருந்தால் நட்சத்திரம் வைத்திருக்கும் பாவம் உடனடியாக செயலிழந்து விடும். 4ம் பாவம் அடுத்த நிலையிலும், 1௦ம் பாவம் அதற்கு அடுத்த நிலையிலும் ஒரு குறிப்பிட்ட பாவத்தினை செயலிழக்க (தீமையை) வைக்கும் என்பதை வாசகர்களை கவனிக்க வேண்டுகின்றேன்.

விதி 3

ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்தின் பாவத்திற்கு, அது நின்ற நட்சத்திரம், உபநட்சத்திர அதிபதிகள் சாதகமான நிலையில் இருந்தால் மிக சிறப்பாக எந்தவித தடைகளும் இல்லாமல் ஜாதகர் அந்த பாவ பலனை அனுபவிப்பார்.

இதனை ஒரு உதாரணத்துடன் விளக்குகின்றேன். விதி 1ல் குறிப்பிட்ட அதே உதாரணத்தை சற்று மாற்றி கீழே தரப்பட்டுள்ளது.

கிரகம்
நட்ச அதிபதி
உபநட்ச அதிபதி
சனி
புதன்
குரு
2
6
4


இங்கு 2ம் பாவத்திற்கு 6ம் பாவம், 5ம் பாவமாக வருவதால், 2ம் பாவத்திற்கு சாதகமான பலனை தரும். ஜாதகரின் கையிருப்பு பணம் (தன நிலை) நாளுக்கு நாள் உயரும். ஜாதகரின் செலவுகள் ஊதாரித்தனமாக இல்லாமல் பணத்தை பெருக்குகின்ற நிலையில் இருக்கும்.

மேலும் 2ம் பாவத்திற்கு 4ம் பாவம், 3ம் பாவமாக வருவதால், 2ம் பாவத்திற்கு சாதகமான நிலையைத் தரும். குறிப்பாக ஜாதகரின் கையிருப்பு பணம் சொத்துக்களாக மாறுவதை குறிக்கும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பாவம் தனது திரிகோண பாவத்தை தொடர்பு கொள்வதை காட்டிலும், தனது பாவத்திற்கு 3,11ம் பாவங்களை தொடர்பு கொள்வது அந்த பாவத்திற்கு கூடுதல் வலிமையை தரும்.

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட 3,11ம் பாவங்கள், மேலே குறிப்பிட்ட பாவத்திற்கு தீமையை செய்யும் பாவங்களுக்கு பாதகமான பாவங்கள் என்பதால், தன்னுடைய வீட்டிலிருந்து 3,11ம் பாவங்களை ஒரு பாவம் தொடர்பு கொள்ளும் போது தனது பாவத்திற்கு கூடுதல் பலத்தை பெற்று விடுகின்றது. (எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில்)

அதே நேரத்தில் சனி நின்ற நட்சத்திரம் காட்டிய 6ம் பாவத்திற்கு, சனி நின்ற உபநட்சத்திரம் காட்டிய 4ம் பாவம், 11ம் பாவமாக வருவதால், 6ம் பாவத்தினை பெரிய அளவில் பலப்படுத்தும்.

அதாவது இங்கு நட்சத்திரமும், உபநட்சத்திரமும் 2ம் பாவத்தினை பலப்படுத்துவதால், 2ம் பாவம் நன்கு பலம் பெற்று ஜாதகரின் கையிருப்பு பணம் நாளுக்கு நாள் உயரும்.

விதி 4

ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்தின் பாவத்திற்கு, அது நின்ற நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகள் பாதகமான நிலையில் இருந்தால், மேற்கண்ட பாவ பலனை எவ்வித முன்னேற்றமும் இன்றி தொடர்ந்து பிரச்சனைகளுடனே அனுபவிப்பார்.

கிரகம்
நட்ச அதிபதி
உபநட்ச அதிபதி
சனி
புதன்
குரு
2
9
1


மேற்கண்ட 3 விதிகளையும் கவனித்திருந்த வாசகர்களுக்கு இதை மேலும் விளக்க தேவையில்லை என அடியேன் கருதுவதால் இவற்றை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

மேற்கண்ட 4 விதிகளில் கடைசியாக நாம் பார்த்த விதி 3 மற்றும் விதி 4ல் உள்ளது போன்று (நட்சத்திரமும், உபநட்சத்திரமும் ஒன்றுக்கொன்று சாதகமான நிலையில்) ஒருவரின் ஜாதகத்தில் நிறைய பாவங்கள் இருந்தால் பாவங்களின் கொடுப்பினையை நிர்ணயம் செய்வது வாசகர்களுக்கு மிகவும் எளிது.

ஆனால், விதி 1 மற்றும் விதி 2ல் உள்ளது போன்று (நட்சத்திரமும், உபநட்சத்திரமும் ஒன்றுக்கொன்று பாதகமான நிலையில்) ஒருவரின் ஜாதகத்தில் நிறைய பாவங்கள் இருந்தால் பாவங்களின் கொடுப்பினையை சற்று கவனமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொதுவாக மேற்கண்ட அமைப்பை ஒரு குறிப்பிட்ட பாவத்தில் கொண்ட ஜாதங்களில் இரண்டு விதமான விளைவுகளை ஜாதகர் அனுபவிப்பார்.

விதி 1ன் படி அமைந்தால், குறிப்பிட்ட பாவ பலனை முதலில் அனுபவித்து, பிறகு அனுபவிக்க முடியாமல் போகும் நிலை வரும்.

விதி 2ன் படி அமைந்தால், குறிப்பிட்ட பாவ பலனை முதலில் பல்வேறு தடைகள் மூலம் அனுபவிக்க முடியாவிட்டாலும், பிறகு அனுபவிக்க கூடிய வாய்ப்பு வரும்.

அதாவது ஒரு குறிப்பிட்ட கிரகம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரம் மூலம் செயல்பட்டாலும், இதில் உபநட்சத்திரமே வலிமையானது என்பது பொது விதி. ஆனால் உபநட்சத்திரம் என்பது நட்சத்திரத்தின் உள்ளே இருந்து செயல்படுவதால், நட்சத்திரத்திற்கு நாம் எந்த வித முக்கியத்துவம் தராமால் விட்டு விட முடியாது.

நட்சத்திர சம்பவத்தைக் காட்டும் என்பதால், நட்சத்திரம் காட்டிய பாவ செயல் நடந்தே தீரும். அது தொடருமா, தொடராதா மற்றும் தொடர்ந்தால் விரைவில் முழுமை பெறுமா (1௦௦% நடைபெறுதல்) அல்லது நட்சத்திரம் காட்டிய பாவ செயல் பல சிக்கல்களுடன்(முட்டுக்கட்டைகளுடன்) தொடர்ந்து முழுமை பெறுமா என்பதை உபநட்சத்திரம் தீர்மானிக்கும்.

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உபநட்சத்திரம் 8,12ம் பாவங்களை காட்டினால், நட்சத்திரம் காட்டிய பாவ பலன்கள் நடைபெற துவங்கிய சிறிது காலத்திலேயே தொடர்ந்து நடைபெறாமல் விரைவில் முடிவுக்கு வந்து விடும். உபநட்சத்திரம் காட்டிய பாவங்கள் உடனே செயல்பட துவங்கி விடும்.

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உபநட்சத்திரம் 4,10ம் பாவங்களை காட்டினால், நட்சத்திரம் காட்டிய பாவ பலன்கள் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் காலம் வரை நடைபெற்று பிறகு படிப்படியாக செயலிழந்து விடும். இதில் 4ம் பாவம் 7௦ சதவிகிதம் (3ல் 2 பங்கு) வரையிலும் நடைபெற்று, பிறகு உபநட்சத்திரம் காட்டிய பாவம் செயல்பட துவங்கும்.

நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு உபநட்சத்திரம் 2,6ம் பாவங்களை காட்டினால், நட்சத்திரம் காட்டிய பாவ பலன்கள் சில சிரமங்களுடன் சராசரி அளவுக்கு உட்பட்டு செயல்படும். உபநட்சத்திரம் காட்டிய பாவங்கள் உடனே செயல்படாது.


மேலும் ஒரு குறிப்பிட்ட பாவமுனையின் உபநட்சத்திர அதிபதி, தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் வாயிலாக தன்னுடைய பாவ பலனை நிர்ணயிக்கும். இதுவே அந்த பாவத்தின் கொடுப்பினையை 1௦௦% நிர்ணயம் செய்யாது. 6௦% மட்டுமே நிர்ணயம் செய்யும்.

எனவே நுட்பமாக ஒரு குறிப்பிட்ட பாவத்தினை ஆய்வு செய்ய, அந்த பாவமுனையின் நட்சத்திர அதிபதி மற்றும் நட்சத்திர அதிபதி மற்றும் உப-உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகங்களையும் குறித்து கொள்ள வேண்டும். மேற்கண்ட கிரகங்கள், தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் வாயிலாக மற்ற பாவமுனைகளோடு கொள்கின்ற தொடர்புகளை கொண்டு மீதியுள்ள 40% கொடுப்பினையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இந்த 40 சதவிகிதத்தில் மேலே குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் அந்த பாவமுனையின் உப-உபநட்சத்திர அதிபதி 25% பங்கும், அந்த பாவமுனையின் நட்சத்திர அதிபதி 15% பங்கும் பெற்றிருக்கும் என்பதை வாசகர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றேன்.

2. பிற பாவ விளைவு அல்லது புற விளைவு

இதுவரை நாம் பார்த்த 4 விதிகளிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எதுவோ அதுவாகவே மாறுகின்றது. அதாவது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகம், தன்னுடைய பாவ பலனை விட தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திர அதிபதிகள் தொடர்பு கொண்ட பாவங்களின் பலன்களை தான் செய்யும்.

அப்படி அந்த பாவங்களின் பலன்களை செய்யும் போது, மேற்கண்ட பாவங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகத்தின் பாவத்திற்கு சாதகமான பாவங்களாக இருக்கும் பட்சத்தில், தனது பாவ பலனை தக்க வைத்து கொண்டு, தனது நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகளின் பாவ பலன்களை செய்யும்.

இந்த ஜாதகத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் விட (ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகத்தின் நட்சத்திரம், உபநட்சத்திரத்தில் உள்ள கிரகங்களை விட) தனது பாவ செயலை மிகவும் வலிமையாக எடுத்து நடத்தும் அதிகாரத்தை மேற்கண்ட கிரகம் பெறும்.

அதாவது ஒரு தரமான பொருளை தயாரிக்கும் நபரே அந்த பொருளை விற்கும் போது (தனது பொருளை தானே விற்பதை போன்று) தனது பிரதிநிதிகளை (Agent) விட விற்பனையை சிறப்பாக செய்வார் என்பதை ஒரு உதாரணமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஒரு வேளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகம் நின்ற நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகள் தொடர்பு கொண்ட பாவங்கள், கிரகத்தின் பாவத்திற்கு பாதகமான நிலையில் இருந்தால், தனது பாவ பலனை மேற்கண்ட கிரகம் இழந்து, தனது நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகளின் பாவ பலன்களை செய்யும்.

இந்த ஜாதகத்தில் உள்ள மற்ற எல்லா கிரகங்களையும் விட, தன் பாவ பலனுக்கு எதிரான பலனை மேற்கண்ட கிரகம் செய்யும்.

இதையே வேறு மாதிரியாகவும் கூறலாம். அதாவது ஒரு கிரகம், தன்னுடைய கிரக மற்றும் பாவ காரகங்கள் மூலம், வேறு சில கிரக மற்றும் பாவ காரகங்களை செயல்படுத்தும். ஜோதிடத்தில் எந்த கிரகமும் தனித்து இயங்கவில்லை (தனது நட்சத்திர, உபநட்சத்திரம் அதிபதியை பொருத்தே இயங்கும்) என்பது வாசகர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

அதே போல் ஒவ்வொரு பாவமும், தன்னை தொடர்பு கொண்ட வேறொரு பாவத்தின் மூலமே இயங்குகின்றது. அதாவது ஒரு பாவத்தின் ஆரம்பமுனை தான் கொண்டிருக்கும் நட்சத்திர, உபநட்சத்திரம் அதிபதிகள் மூலம் மற்ற பாவங்களை இயக்குகின்ற அதே நேரத்தில், மற்ற பாவங்களின் மூலமும் தன்னை இயக்கிக்கொள்கின்றது.

இதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றேன். வாசகர்கள் புரிந்துக்கொள்ளவும்.

கிரகம் வைத்திருக்கும் பாவம்
கிரகம் நின்ற  நட்சத்திர அதிபதி வைத்திருக்கும்  பாவம்
கிரகம் நின்ற  உபநட்சத்திர அதிபதி வைத்திருக்கும்  பாவம்
ஆதாரப்பகுதி
(Source)
சம்பவப்பகுதி
(Matter)
தீர்மானிக்கும் பகுதி
(Decider)
செயல்படுத்தும் பாவம்
செயல்படும் பாவங்கள்அதன்படி ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவமுனையின் உபநட்சத்திரமாக உள்ள கிரகத்தின் நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருந்தால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவத்தை எடுத்து நடத்த நிறைய கிரகங்கள் பிரதிநிதியாக (Agent) செயல்பட்டு அந்த பாவபலனை எடுத்து நடத்தும்.

மேற்கண்ட பிரதிநிதியாக உள்ள கிரகங்கள் ஏதேனும் சில பாவங்களுக்கு உபநட்சத்திரமாக அமைந்தால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவத்தை இயக்க நிறைய பாவங்கள் காத்துக்கொண்டிருக்கின்றது. இதைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாவத்தின் பிறபாவ விளைவு அல்லது புற விளைவு என்று கூறப்படுகின்றது.

உதாரணமாக,

2ம் பாவ, உபநட்சத்திர அதிபதி சுக்ரன் எனக்கொள்வோம். சுக்ரன், புதன் சாரம், சனியின் உபநட்சத்திரத்தில் இருப்பதாக கொள்வோம்.

அதாவது,


கிரகம்
கிரகம் நின்ற  நட்சத்திர அதிபதி
கிரகம் நின்ற  உபநட்சத்திர அதிபதி
சுக்ரன்
2
புதன்
4

சனி
6

செயல்படுத்தும் பாவம்
செயல்படும் பாவங்கள்


இங்கு நட்சத்திரம் காட்டிய 4ம் பாவத்தை, உபநட்சத்திரம் காட்டிய 6ம் பாவம் பலப்படுத்தும். நட்சத்திரமும், உபநட்சத்திரமும் ஒன்றுக்கொன்று சாதகமான நிலையில் உள்ளதால் இவைகள் காட்டிய 4,6ம் பாவங்கள் செயல்படும்.

இங்கு 4,6ம் பாவங்களை செயல்படுத்தும் கிரகம் சுக்ரன் ஆகும். சுக்ரன் இங்கு 2ம் பாவத்தின் மூலமாக (Source) 4,6ம் பாவங்களை செயல்படுத்துகின்றார். அதாவது சுக்ரன் இங்கு புதனாகவும் சனியாகவும் மாறிவிடுகின்றது. புதன், சனி வைத்திருக்கும் 4,6ம் பாவங்களை சுக்ரன் இங்கு செயல்படுத்துகின்றார்.

மேற்கண்ட 4,6ம் பாவங்கள், 2ம் பாவத்திற்கு சாதகமானதா, பாதகமானதா அல்லது நடுநிலையானதா என்று 2ம் பாவத்தை முன் நிறுத்தி பார்ப்பது 2ம் பாவத்தின் தன்பாவ விளைவு (தொடர்பு) அல்லது அகவிளைவு எனப்படும்.

அதே நேரத்தில் 4,6ம் பாவங்களை எடுத்து நடத்தக்கூடிய கிரகம் சுக்ரன் என்றும், இங்கு 2ம் பாவ உபநட்சத்திர அதிபதி என்பதால், 2ம் பாவ ரீதியில் 4,6ம் பாவங்கள் செயல்படுகின்றது என்று 4,6ம் பாவங்களை முன் நிறுத்தி பார்ப்பது 4,6ம் பாவத்தின் பிறபாவ விளைவு (தொடர்பு) அல்லது புறத்தொடர்பு எனப்படும்.

பலனை நிர்ணயிப்பதில் தன்பாவ விளைவையும், பிறபாவ விளைவையும் எப்படி வேறுபடுத்தி வாசகர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை சுருக்கமாக கூறுகின்றேன்.

மேற்கண்ட 2ம் பாவத்தின் தன்பாவ விளைவிற்கான பலன் பின்வருமாறு அமையும்.

2ம் பாவம், இங்கு நட்சத்திரம் வழியாக 4ம் பாவத்தை தொடர்பு கொள்வதால் பணத்தின் (2ம் பாவம்) மூலமாக ஜாதகருக்கு சொத்து சேர்வதை காட்டுகின்றது. நட்சத்திரம் காட்டிய 4ம் பாவத்திற்கு உபநட்சத்திரம் காட்டிய 6ம் பாவம் சாதகமான பாவம் என்பதால் 4ம் பாவம் மேலும் பலம் பெறும். அதாவது சொத்துக்கள் மேலும் அதிகரிக்கும்.

உபநட்சத்திரம் வைத்துள்ள 6ம் பாவத்திற்கு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் 4ம் பாவம் சாதகமான பாவம் என்பதால் 6ம் பாவமும் செயல்படும். அதாவது 6ம் பாவத்தின் காரகங்களான ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள், அவற்றின் மூலமாக வருமானம் (வாடகை), அல்லது கடன் போன்றவை உண்டாகும்.

சொத்துக்கள் அதிகரிப்பதால் ஜாதகரின் பொருளாதாரம் (2ம் பாவம்) நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதாவது 2ம் பாவக் கொடுப்பினை பலம் பெறுகின்றது.

அடுத்து 4,6ம் பாவங்களின் பிற பாவ விளைவிற்கான பலன் பின்வருமாறு அமையும்.

4ம் பாவ உபநட்சத்திரத்தின் (புதன்) நட்சத்திரத்தில் 2ம் பாவ உபநட்சத்திர அதிபதி சுக்ரன் இருப்பதால் 4ம் பாவ செயலை 2ம் பாவ உபநட்சத்திர அதிபதி சுக்ரன், தான் வைத்திருக்கும் 2ம் பாவம் வழியாக செய்வார். அதாவது ஜாதகரின் சொந்த (கையிருப்பு) பணத்தின் மூலம் (அவர் யாரிடமும் கடன் வாங்காமல்) ஜாதகர் சொத்துக்கள் வாங்குவதை குறிக்கும். அதாவது 4ம் பாவத்தை எடுத்து நடத்தும் ஆற்றல் 2ம் பாவத்திற்கு உள்ளது.

அதேபோல் 6ம் பாவ உபநட்சத்திரத்தின் (சனி) உபநட்சத்திரத்தில் 2ம் பாவ உபநட்சத்திர அதிபதி சுக்ரன் இருப்பதால் 6ம் பாவ செயலை எடுத்து நடத்தும் ஆற்றல் சுக்ரனுக்கு உண்டு. அதாவது இங்கு ஜாதகர் தனது தனத்தை (2ம் பாவம்) கொண்டு (பொன் போன்றவை) கடன் வாங்குவது, 2 வது சொத்து சேர்ப்பது போன்ற பலன்களை சுக்ரன் தருவார். அதாவது 6ம் பாவத்தை எடுத்து நடத்தக்கூடிய ஆற்றல் 2ம் பாவத்திற்கு உண்டு.

அதாவது ஒரு பாவமுனையின் உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம், தான் நின்ற நட்சத்திர மற்றும் உபநட்சத்திர அதிபதிகள் மூலம் தனது பாவ பலனை முழுமையாக இழந்து விட்டால், அந்த பாவ பலனை ஜாதகரால் சிறிது காலம் கூட அனுபவிக்க முடியாது என்று அவசரமாக நாம் அந்த பாவ பலனை நிர்ணயம் செய்யக்கூடாது.

உதாரணமாக ஒரு குடும்பத் தலைவன் மூலம் எவ்வித வருமானமும் இல்லை என்றால் அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் தத்தளிக்கும் என்பது பொது விதி. ஆனால் அந்த குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்ய நிறைய உறவினர்கள் (அண்ணன்,தம்பி,மாமனார்,மைத்துனர் போன்றவர்கள்) இருந்தால் அந்த குடும்பம் பொருளாதார சிரமங்களிலிருந்து தப்பிக்க அவ்வப்போது வழி கிடைக்கும்.

உதாரணமாக ஒரு பாவ உபநட்சத்திர அதிபதி தனது பாவத்தினை விதிப்படி கெடுக்கும் நிலையில் இருந்தாலும் கூட அதனுடைய நட்சத்திரம், உபநட்சத்திரத்தில் சுமார் 6 கிரகங்கள் இருந்தால், இந்த 6 கிரகங்களும் விதிப்படி பாதிக்கப்பட்ட பாவத்தை மதி என்ற தசா, புத்திகள் மூலம் அவ்வப்போது (இந்த 6 கிரகங்களின் தசா, புத்திகளில்) இயக்கும்.

9 கிரகங்களில் 6 கிரகங்கள் மேலே குறிப்பிட்ட பாவத்தை இயக்கினால் அந்த பாவ பலனை ஜாதகர் அனுபவிக்க வேண்டிய சூழலை, தசா, புத்திகள் ஏற்படுத்தி தரும். இதைத் தான் நம் முன்னோர்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று கூறினார்கள். (மதி என்பது சந்திரனை குறிக்கும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு தான் நாம் தசா, புத்திகளை கணக்கீடு செய்கின்றோம்.)

உதாரணமாக 2ம் பாவ உபநட்சத்திர அதிபதி, 9ம் பாவ தொடர்பு கொண்டால் ஜாதகர் தன்னுடைய பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார். அதனால் ஜாதகர் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் அது கரைந்து விடும். எனவே ஜாதகர் கையில் பணமாக வைத்திராமல் சொத்தாக வைத்திருக்க வேண்டும்.

இதே ஜாதகத்தில், 2ம் பாவ உபநட்சத்திர அதிபதி யாரோ, அவரின் நட்சத்திரத்திலும் நிறைய கிரகங்கள் இருந்து, அந்த கிரகங்கள் பல பாவமுனைகளுக்கு உபநட்சத்திர அதிபதியாக அமைந்தால், ஜாதகருக்கு பல்வேறு வழிகளில் அதாவது மேற்கண்ட கிரகங்களின் காரக ரீதியிலும் மற்றும் மேற்கண்ட கிரகங்கள் எந்த எந்த பாவமுனைக்கு தொடர்பு பெற்றிக்கின்றதோ அத்தனை பாவங்களின் காரக ரீதியிலும் ஜாதகருக்கு பணம் வந்து சேரும்.

அதே நேரத்தில் மேற்கண்ட கிரகங்கள் எந்த பாவமுனைகளுக்கும் நட்சத்திர, உபநட்சத்திர, உபஉபநட்சத்திர அதிபதிகளாக அமையாமல் இருந்தால், இந்த கிரகங்களின் காரக ரீதியில் மட்டும் தனம் வந்து சேரும். இது அவ்வளவாக முன்னேற்றத்தை தன நிலைக்கு தராது.

அதாவது ஒரு குறிப்பிட்ட பாவகாரகத்தை சிறப்பாக நீடித்த நிலையில் ஜாதகர் சிறப்பாக அனுபவிக்க வேண்டுமானால், பின்வரும் அமைப்புப்படி அவருடைய ஜாதகம் இருந்தால் சிறப்பு.

ஒரு குறிப்பிட்ட அல்லது ஆய்வுக்குரிய பாவத்திற்கு அந்த பாவமுனையின் உபநட்சத்திர அதிபதி, நின்ற நட்சத்திரமும், உபநட்சத்திரமும், 12 பாவமுனைகளில் ஆய்வுக்குரிய பாவத்திற்கு சாதகமான பாவ உபநட்சத்திரமாக இருக்க வேண்டும். குறிப்பாக மேற்கண்ட பாவமுனைகள் ஆய்வுக்குரிய பாவத்திற்கு 3,5,9,11ம் பாவங்களாக இருப்பது சிறப்பு.

பாவங்கள் (ஆய்வுக்குரிய பாவத்திலிருந்து 3,5,9,11ம் பாவங்கள்) எந்த விதத்திலும் லக்ன பாவத்திற்கு 8,12ம் பாவங்களாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பாவம் தனது பாவத்திற்கு சாதகமான பாவங்களைத் தொடர்பு கொண்டிருந்தாலும், அது லக்னத்திற்கு 8,12ம் பாவங்களாக அமைந்தால் அந்த பாவகாரகங்களை ஜாதகரால் அனுபவிக்கமுடியாது.

ஜாதகரால் அனுபவிக்க முடியாதது ஜாதகருக்கு கிடைத்தும் என்ன பயன்? ஒரு குறிப்பிட்ட பாவம் தனது பாவத்திற்கு சாதகமாகவும், லக்னத்திற்கு 8,12ம் பாவங்களாகவும் உள்ள அகம் சார்ந்த காரகங்களில் தீமைகளை அதிக அளவு ஜாதகர் அனுபவிப்பார். அதாவது ஒவ்வொரு பாவமும் தன்னுள், 5௦ சதவீதம் அகம் சார்ந்த காரங்களையும் 5௦ சதவீதம் புறம் சார்ந்த காரங்களையும் வைத்துள்ளது என்பதை ஒரு பொது விதியாக கொள்ளலாம்.

உண்மையில் ஒவ்வொரு பாவமும் தன்னுள் 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் வைத்துள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட பாவத்தை, எந்த பாவம் தொடர்பு கொள்கின்றதோ, அதை பொருத்து அந்த பாவத்தில் உள்ள 12 பாவங்களின் காரகங்களில் தொடர்பு கொண்ட பாவத்தின் காரகங்கள் மட்டும் செயல்படும்.

உதாரணமாக 5ம் பாவ உபநட்சத்திர அதிபதி, தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் இவற்றின் மூலம் 2,1௦ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு கமிஷன் (அல்லது) உடல் உழைப்பு இல்லாத வகையில் பணம் (2ம் பாவம்) கிடைக்கும். மேலும் தொழிலும் (1௦ம் பாவம்) கமிஷன் சார்ந்த வகையில் நிரந்தரமாக அமையும்.

அதாவது 2ம் பாவத்தில் உள்ள 5ம் பாவகாரகம் கமிஷன் பணம் எனவும், 1௦ம் பாவத்தில் உள்ள 5ம் பாவகாரகம் கமிஷன் தொழில் எனவும் ஒவ்வொரு பாவத்திலும் 12 பாவங்களின் காரகங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பாவத்தை எந்த பாவம் தொடர்பு கொண்டாலும் மேலே குறிப்பிட்ட பாவத்தில் உள்ள காரகங்களில் தொடர்பு கொண்ட பாவத்தின் காரகங்கள் செயல்படும்.

இதை சுருக்கமாக விளக்கினால், 12 பாவங்களில் ஜாதகருக்கு 1,3,7,11 மற்றும் 2,4,10ம் பாவங்கள் பொதுவாக பெருமளவு தீமையை தருவதில்லை. 1,3,7,11ம் பாவக்காரகங்களான, மற்றவரிடமிருந்து ஜாதகரின் தனித்தன்மை வெளிப்படுத்தல் (1ம் பாவம்); மனோபலம், தைரியம், தன்னம்பிக்கை (3ம் பாவம்); வெளியுலக தொடர்பு, மற்றவர்களிடம் இணக்கமாக செல்லுதல், திருமண உறவு (7ம் பாவம்); மனமகிழ்ச்சி, சந்தோஷம், எதிலும் திருப்தியடைதல் (11ம் பாவம்) போன்ற காரகங்கள் ஒரு மனிதனுக்கு சிறப்பாக நீடித்த நிலையில் அமைவது என்பது அபூர்வம்.

மேற்கண்ட 1,3,7,11ம் பாவ உபநட்சத்திர அதிபதிகள் தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தங்களுடைய பாவங்களையே தொடர்பு கொண்டாலும் அல்லது தங்களுடைய பாவத்திற்கு 4,8,12 மற்றும் லக்னத்திற்கு 8,12ம் பாவத்துடன் கொள்ளாமல் இருந்தாலும் அது ஒரு உன்னதமான ஜாதகம் எனக் கொள்ளலாம்.

அதே போல் 2,4,10ம் பாவங்கள் லக்னபாவத்தை கெடுக்காமலும் 2ம் பாவத்திற்கு மிகவும் சாதகமான பாவங்களாகவும் அமைகின்றன. ஒருவருக்கு எப்போதும் கையிருப்பு பணம் இருப்பதையும் (2ம் பாவம்); நிரந்தர வருமானத்திற்கு உத்திரவாதத்தை தரும் சொத்து (4ம் பாவம்); நிரந்தரமான தொழில், அந்தஸ்து (1௦ம் பாவம்) போன்றவை நீடித்து இருக்க 2,4,10ம் பாவங்கள் வலுப்பெற வேண்டும். வலுப்பெற்றால் அது அவருக்கு மட்டுமல்லாமல் அவரை நம்பி இருப்பவர்களுக்கும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பை தரும்.

மேற்கண்ட 2,4,10ம் பாவமுனைகளின் உபநட்சத்திர அதிபதிகள் தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தங்களுடைய பாவங்களையேத் தொடர்பு கொண்டாலும் அல்லது தங்களுடைய பாவத்திற்கு 4,8,12 மற்றும் லக்னத்திற்கு 8,12ம் பாவங்களையேத் தொடர்பு கொள்ளாமலும் இருந்தாலே அதுவும் பொருட் சார்ந்த வாழ்க்கைக்கு சிறப்பினை தரும் உன்னதமான ஜாதகம் என கொள்ளலாம்.

மேலும் பெரும்பாலான கிரகங்கள் மற்றும் பாவ உபநட்சத்திர அதிபதிகள் 1,3,7,11 மற்றும் 2,4,10 பாவங்களை தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தொடர்பு கொண்டால் ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்.

அடுத்து 6,8,12ம் பாவ உபநட்சத்திரங்கள் லக்னம் என்ற ஜாதகருக்கு தீமையைத் தரும் என்பதால் இவைகள் தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தங்களுடைய பாவங்களையேத் தொடர்பு கொள்ள கூடாது. தங்களுடைய பாவங்களை கெடுக்கும் பாவங்களான, தங்களது பாவத்திலிருந்து 4,8,12ம் பாவங்களான ஒற்றைப்படை பாவங்களைத் தொடர்பு கொள்ளும் போது, நோய், கடன், இழப்புகள் போன்றவற்றை ஜாதகர் அனுபவிக்க மாட்டார்.

இதை தான் நம் முன்னோர்கள் “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று ஜோதிட பழமொழியாகக் கூறினார்கள். நமக்கு தீமை செய்யும் பாவங்கள் வலுக்குறையும் போது அவைகளால் நாம் தீமையான பலன்களை அனுபவிக்காமல்தப்பித்துக் கொள்ளலாம் என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

6ம் பாவம் என்பது லக்னம் என்ற உடலுக்கு (நோய்) தீமையை தரும் பாவம் என்றாலும் கூட, தற்கால நடைமுறை வாழ்க்கையில் 6ம் பாவத்தில் உள்ள பெரும்பாலான காரகங்கள் பொருள்சார்ந்த வாழ்க்கை முறைக்கு பெருமளவு உதவி புரிகின்றன.

எனவே 6ம் பாவம் லக்னத்திற்கு தீமையைத் தரும் 8,12ம் பாவத்தையும், தனது பாவத்திற்கு 4,8,12ம் பாவமான 1,5,9ம் பாவத்தையும் தொடர்பு கொள்ளாமல் இருந்தாலேயே போதுமானது.

மேலும் பெரும்பாலான கிரகங்கள் மற்றும் பாவ உபநட்சத்திரங்கள் 6,8,12ம் பாவங்களைத் தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தொடர்பு கொள்ளாமல் இருப்பது ஜாதகரின் வாழ்க்கைக்கு ஒரு நிம்மதியைத் தரும்.

மேலும் 5,9ம் பாவங்கள் கர்ம ஸ்தானமான 2,6,1௦ம் பாவத்திற்கு 4,8,12ம் பாவங்களாக அமையும் என்பதால் பொருளாதார ரீதியில் அவ்வப்போது வீழ்ச்சியையும், சுப செலவுகளையும், எப்போதும் உல்லாச சிந்தனைகளையும், இன்ப உணர்ச்சிகளை நுகர்வதில் அதீத விருப்பத்தையும் ஜாதகருக்கு தரும்.


மேலும் இதே 5,9ம் பாவங்களை நம் முன்னோர்கள் தர்மஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய மற்றும் பாக்ய ஸ்தானங்கள் என்றும் அழைத்தனர். எனவே இந்த பாவங்கள் வலுப்பெற்றால்தான் ஒரு ஜாதகருக்கு நிம்மதியும், தெய்வ அனுக்கிரஹமும் கிடைக்கும்.

5,9ம் பாவ காரகங்கள் அனைத்தும் லக்னத்தையே சார்ந்து இருப்பதால், 5,9ம் பாவங்கள் லக்னத்திற்கு 8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளக் கூடாது. 5,9ம் பாவங்கள் எந்த பாவத்துடன் தொடர்பு கொள்கின்றதோ, அந்த பாவத்தின் காரகங்கள் ஜாதகருக்கு தெய்வ அனுக்கிரஹம் மூலம் மிக எளிதாக கிடைக்கும். ஜாதகர் அதற்காக பெரிய அளவு முயற்சிகள், அதிக உடல் உழைப்பு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

உதாரணமாக 5,9ம் பாவங்கள் 2,6,1௦ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் கடின உழைப்பு எதையும் மேற்கொள்ளாமல் எளிதாக பொருளாதாரத்தை ஈட்டுவார் (கமிஷன், நன்கொடை, பூர்வீக பொன் பொருட்கள், போன்றவற்றின் மூலம்).

அதே நேரத்தில் 5,9ம் பாவம் 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் துன்பங்களுக்கு காரணம் ஜாதகரே இல்லாமல் இருந்தாலும் கூட அதை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஜாதகருக்கு ஏற்படும். ஏனெனில் இங்கு பூர்வ புண்ணியம் கெட்டு விட்ட காரணத்தினால் தெய்வத்தின் தண்டனை என்று கூட இதை கூறலாம். மேற்கண்ட அமைப்பை உடைய ஜாதகர்கள் மிக எளிதாக பிரச்சனைகளில் சிக்கி கொள்பவர்கள் என்றால் அது மிகையல்ல.

ஒரு ஜாதகத்தில் 5,9ம் பாவங்கள் வலுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால் பிற கிரகங்கள் மற்றும் பிற பாவ உபநட்சத்திரங்கள் 5,9ம் பாவத்தை தொடர்பு கொள்வது என்பது பொருளாதார ரீதியில் சிறப்பினை தராது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

மேலும் பாவமுனைத் தொடர்புகளை பற்றி எனது குருநாதர் பிரசன்ன ஜோதிட மணி கி.பாஸ்கரன் அவர்கள் எழுதிய “பாவமுனை தொடர்புகளின் ரகசியம்” மற்றும் “பாவம்முனையை பயன்படுத்தும் முறைகள்” போன்ற நூல்களில் 12 பாவங்களின் உட்தொடர்புகள் மற்றும் வெளித்தொடர்புகள் பற்றின விவரங்கள் தெளிவாகவும், விரிவாகவும் உள்ளன எனக்கூறி இக்கட்டுரையை இத்துடன் முடிக்கின்றேன்.

2 comments: