கொடுப்பினையும் தசாபுத்திகளும்-கட்டுரை




புத்தகத்தின் பெயர் : கொடுப்பினையும் தசபுக்திகளும் 

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 400/- 

Google pay : 9445721793


சூரியன்

        சூரியன் வாயுப்பொருட்களால் ஆன ஒரு நெருப்புக்கோளம் ஆகும். சூரியனின் விட்டம் 14,௦௦,௦௦௦ கிலோமீட்டர்கள் ஆகும். அதாவது இது நமது பூமியின் விட்டத்தை போல் சுமார் 1௦ மடங்கு அதிகம் ஆகும். அதே போல் சூரியனின் ஈர்ப்பு சக்தி, பூமியின் புவி ஈர்ப்பு சக்தியை விட சுமார் 3௦ மடங்கு அதிகமாகும். சூரியன், நாம் வாழும் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியன் நாம் வாழும் பூமியை விட அளவில் சுமார் 1௦ லட்சம் மடங்கு பெரியது. சூரியனை மையமாக வைத்து அனைத்து கிரகங்களும் சுற்றி வருவதால் இதனை கிரகங்களின் தலைவர் என அழைக்கின்றோம். எனவே எல்லாவற்றிலும் முதன்மையானவர்களை சூரியன் குறிக்கும்.

                        ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர். தந்தையைச் சார்ந்தே குடும்பத்தில் உறுப்பினர்கள் இருப்பார்கள். எனவே குடும்ப உறவில் தந்தையையும், தந்தை வர்க்கத்தினரையும் சூரியன் குறிக்கும். அதேப்போல் நம்மை ஆளும் அனைத்து நபர்களையும் சூரியன் குறிக்கும். அதாவது நாட்டுத் தலைவர்கள், கட்சித்தலைவர்கள், பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்துத் தரும் மேலதிகாரிகள் போன்றவர்களை சூரியன் குறிக்கும்.

        எனவே தலைமை தாங்குதல், மனோதிடம், நேர்மை, ஆளுமை திறன், நிர்வாக திறன், ஒருவருடைய தனித்தன்மை, உத்தியோகம், அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுய கௌரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் போன்றவற்றுக்கு சூரியன் காரகமாகும்.

        கிரகங்களில் சூரியன் மட்டுமே சுய ஒளியை கொண்டுள்ளது. சூரியனில் இருந்துதான் மற்ற கிரகங்களுக்கு ஒளி செல்கின்றது. சூரிய ஒளியைத்தான் மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. ஒளி இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். இருட்டில் நாம் எதையும் பார்க்க இயலாது. எனவே நம் உடலில் கண்களுக்கும், கண்பார்வைக்கும் காரகன் சூரியன் ஆகும். ஒளியின்றி எந்த உயிரினமும் இந்த பிரபஞ்சத்தில் உருவாக முடியாது.

        எனவே உடலில் முக்கிய உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆகும். அதாவது தலை, மூளை, இருதயம், முதுகுத்தண்டு போன்ற உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆகும். அடுத்து உடலில் உள்ள முக்கிய உறுப்பு உடலில் உள்ள எலும்புகள் ஆகும். பரிணாம வளர்ச்சியில் முதலில் தோன்றியவை முதுகெலும்புகள் இல்லாத உயிரினங்களான புழு, பூச்சிகள் போன்றவைகள் ஆகும். முதுகெலும்பு உயிரினங்களே பரிணாம வளர்ச்சியில் அந்தஸ்த்தினை பெறுகின்றது. எனவே எலும்புகளுக்கு காரகனும் சூரியன் ஆகும். 

        சூரியன் நெருப்பு கிரகம் என்பதால் உடலில் உள்ள உஷ்ணத்திற்கும் சூரியனே காரகம் ஆகும். உடலில் உள்ள உஷ்ணத்தின் மாற்றங்களினால் (ஏற்ற, இறக்கங்கள்) தான் நோய்கள் (காய்ச்சல், ஜலதோஷம்) அதிகளவு வருகின்றன. எனவே நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களும், மருந்துப் பொருட்களும் சூரியனின் காரகங்கள் ஆகும். கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன் என்பது போல் உடலுக்கு மூலமான ஆன்மாவும் சூரியனின் காரகமாகும்.

        அதே போல் ஒரு ஜாதகத்தில் பலனை நிர்ணயிப்பதில் லக்னமே பிரதானமானது. சூரியனின் நிலையினை (சூரிய உதயம்) கருத்தில் கொண்டே லக்னம் கணிக்கப்படுகின்றது. கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியனே ஜாதகத்தின் மூலமான (Origin) லக்னபாவத்தையும், மற்ற 11 பாவங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        அதாவது ஒருவரின் விதியை நிர்ணயிப்பது சூரியனே ஆகும். அதன்படி ஒவ்வொரு பாவத்தின் கொடுப்பினையை (லக்ன புள்ளியை நிர்ணயிப்பதின் மூலமாக) சூரியன் நிர்ணயிப்பதாலும், கிரகங்களுக்கு வேலையை பிரித்துத் தர சூரியனே அதிகாரம் பெறுவதாலும் சூரியன் நவகிரகங்களில் கதாநாயக அந்தஸ்தை பெறுகின்றார்.

        மேலும் பகற்பொழுது, மலை, பாறை, காடு, சிங்கம், கோதுமை, தாமிரம், செந்தாமரை, சுவைகளில் காரம், ஆரஞ்சு நிறம், மாணிக்கம், சிவபெருமான், கிழக்குத் திசை போன்றவை சூரியனின் காரகங்களாகும்.

        பெரும்பாலான ஜோதிட நூல்களில் சூரியனை அசுப கிரகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சூரியனின் காரகங்களை சற்று உற்று நோக்கினால் அதில் சுப தன்மைகளே அதிகம் என்பதால் சூரியனை 75% சுபராகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

        சந்திரன்

        மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன. ஆனால் சந்திரன் மட்டும் பூமியை மையமாகக் கொண்டு பூமியை சுற்றி வருகின்றது. அறிவியலில் (வானவியலில்) சந்திரன் ஒரு கோளாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஜோதிஷ சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் சந்திரனை ஒரு கோளாக அங்கீகரித்துள்ளனர். காரணம் இது பூமியின் துணைக்கோள் என்பதால் மற்ற கிரகளிடமிருந்து கதிர்வீச்சை சந்திரன்தான் பெற்று பூமிக்கு தருகின்றது. சந்திரன் பூமியிலிருந்து 27,38,800 மைல்களுக்கு அப்பால் இருந்து பூமியை சுற்றி வருகின்றது. சந்திரனின் சுற்றளவு 6,800 மைல்கள் ஆகும். சந்திரன் 27 நாள், 8 மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வருகின்றது. இது பூமியை 29 நாள், 12 மணி, 44 நிமிடத்தில் ஒரு சுற்று சுற்றி வருகின்றது.

        சந்திரன் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசியை தான் ஜென்மராசி என்று கூறுகின்றோம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதுதான் ஜென்மநட்சத்திரம் ஆகும். சந்திரனை வைத்துதான் தசா-புத்திகள் கணக்கீடு செய்கின்றோம்.

        சூரியனுக்கு அடுத்த படியாக நட்சத்திர அந்தஸ்தினைப் பெரும் கிரகம் சந்திரன் ஆகும். சூரியன் உயிருக்கு காரகர் என்றால் சந்திரன் அந்த உயிரை வைத்திருக்கும் உடலுக்கு காரகர் ஆவார்.

        கிரகங்களிலேயே ராசிமண்டத்தை மிக வேகமாக சுற்றிவரும் கிரகம் சந்திரன் ஆகும். எனவே விரைவான செயல்களுக்கு சந்திரன் காரகர் ஆவார். சந்திரன் உடல் காரகன் என்பதால் உடலுக்கு தேவையான உணவுக்கும் சந்திரனே காரகர் ஆகும். குறிப்பாக விரைவில் அழுகி கெட்டு விடும் எல்லா உணவு பொருட்களுக்கும் (சமைத்த உணவுகள், காய்கறிகள்) சந்திரனே காரகர் ஆவார்.    

        மூளை என்பதற்கு காரகர் சூரியன் என்றாலும், அந்த மூளையில் உண்டாகும் சிந்தனைகளுக்கு சந்திரனே காரகர் ஆவார். எனவே சந்திரனுக்கு மனோ காரகர் என்றும் பெயர். ஒன்பது கிரகங்களும் எந்த எந்த வேலையை ஜாதகருக்கு செய்து தர வேண்டும் என்பதனை லக்னம் உள்ளிட்ட 12 பாவங்கள் மூலம் சூரியன் நிர்ணயம் செய்கின்றார். மேற்கண்ட கிரகங்கள் எந்த எந்த காலங்களில் தன்னுடைய வேலையை செய்ய வேண்டும் என்பதனை சந்திரனே கால நிர்ணயம் (தசா, புத்திகள் மூலம்) செய்கின்றார்.

        குடும்பத் தலைவனின் (சூரியன்) வருமானத்தை, எந்த விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று குடும்பத் தலைவி (சந்திரன்) செயல்படுவதை போல் இங்கு சந்திரன் உள்ளதால் சந்திரன் மாத்ரு காரகர் அதாவது தாய் காரகர் ஆவார். ஒரு குழந்தையை சுற்றியே சந்திரன் வருவதாலும் கூட இதனை தாய் காரகர் எனலாம்.

        எனவே உறவு முறைகளில் சந்திரன், தாயையும், தாய் வர்க்கத்தையும், தாயை போன்று வயதில் மூத்த பெண்களான மாமியார், அத்தை, அண்ணி, மூத்த சகோதரி ஆகியோரையும் குறிக்கும் காரகர் ஆவார்.

        சந்திரன் வேகமாக நகரக்கூடிய கிரகம் என்பதால், இடமாற்றங்களுக்கும், வெளிநாட்டு பயணங்களுக்கும் அலைச்சலுக்கும் சந்திரனே காரகர் ஆவார். அடிக்கடி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரகர் ஆவார்.

        சந்திரன் நீர்க்கிரகம் என்பதாலும் வெண்மை நிறத்திற்கு காரகர் என்பதாலும் உணவுப் பொருட்களில் பால், தயிர், அரிசியை குறிக்கும் காரகர் ஆவார். மேலும் ஏரி, குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குக் காரகர் சந்திரன் ஆவார்.

        சந்திரன் நீர்க்கிரகம் மற்றும் உடலுக்கு காரகர் என்பதால் உடலில் எல்லா பகுதிகளிலும் உள்ள நீர் தன்மையான இரத்தத்திற்கு சந்திரன் காரகர் ஆகும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இரத்தம் உடலில் இருந்து வெளியேறி விட்டால் உயிருக்கு ஆபத்து என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        மேலும் அமைதியான தோற்றம், மனக்குழப்பங்கள், மன பேதலிப்பு, பைத்தியம், குளிர்ச்சி, சளி, சிலேத்தும சீதள நோய்கள், ரத்த அழுத்த நோய்கள், முத்து, அலுமினியம், ஈயம், நீர் வாழ் உயிரினங்கள், சுறுசுறுப்பு, வெண்பட்டு, வெண்குடை, இரவுப்பொழுது, உணவு விடுதிகள், தெய்வங்களில் பார்வதி அம்சம் போன்றவைகளுக்கு சந்திரனே காரகர் ஆகின்றார்.

        குறிப்பாக பஞ்சாங்க கணிதம் சந்திரனின் தினசரி சலனத்தை கணக்கில் கொண்டே உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக சந்திரனை கொண்டே சுபமுகூர்த்தங்கள் குறிக்கப்படுகின்றது. ஆலயங்களில் தெய்வ வழிபாடு, திருவிழாக்கள், முக்கிய விரதங்கள் சந்திரனின் நட்சத்திரம், திதி இவைகளைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        எல்லா ஜோதிட நூல்களிலும் வளர்பிறைச் சந்திரன் சுபத்தன்மை கொண்டதாகவும், தேய்பிறைச் சந்திரன் அசுபத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இது பெருமளவு நடைமுறையில் ஒத்து வருகின்றது.

        செவ்வாய்

        செவ்வாய், சூரியனுக்கு நான்காவது வட்டத்தில் இருந்து, சூரியனை சுற்றி வருகின்றது. இது சூரியனிடமிருந்து சுமார் 22 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடத்தில் சுற்றி கொண்டு, சூரியனை 687 நாட்களில் சுற்றி வருகின்றது. செவ்வாயின் விட்டம் 6755 கிலோமீட்டர் ஆகும்.

        செவ்வாயில் நாம் வாழும் பூமியைப் போன்றே தட்பவெப்ப நிலைகள் உள்ளதால் உயிரினங்கள் செவ்வாயில் வாழ்வதற்கு வாய்ப்புகள் பெருமளவு உண்டு என்று செவ்வாயை நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள். பூமி, செவ்வாயை தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் ஏதும் வாழ்வதற்கு உண்டான சூழல் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        எனவே செவ்வாய் காலி நிலம், அசையா சொத்துக்கள் போன்றவற்றுக்கு காரகர் ஆவார். மேலும் செவ்வாய் பூமியைப் போன்று ஒழுங்கான நிலப்பரப்பினை கொண்டிருக்காமல் கரடுமுரடான பாறைகளையும், மலைகளையும் கொண்ட ஒழுங்கற்ற நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. எனவே கரடுமுரடான ஆயுதங்களுக்கும், கூர்மையான பொருட்களுக்கும் செவ்வாய் காரகர் ஆவார்.

        நிலம் மீது உண்டாக்குபவர் செவ்வாய் ஆவார் மற்றவர் நிலத்தை அபகரிக்க அல்லது தனது நிலத்தை மற்றவரின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள (அதாவது போர்) வேண்டிய சூழல் உண்டாகும். எனவே நிலம் மூலமான சண்டை-சச்சரவுகள், போர், போரில் பயன்படுத்தப்படும் கத்தி, வேல், அம்பு போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவைகளுக்கும்; போரினால் ஏற்படும் காயங்கள், வலி, வேதனை, அடக்குமுறைகள், விபத்து போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆவார்.

        அதே போல் சட்டம்–ஒழுங்கினை கெடுக்கும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் போன்றவர்களுக்கும், இவர்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை போன்ற சீருடை அணிந்த உடல் வலிமை, மனவலிமை உள்ளவர்கள் பணியாற்றும் துறைகளுக்கும், அதில் உள்ளவர்கள் பணியாற்றும் துறைகளுக்கும், அதில் உள்ளவர்களுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.

                        உறவு முறைகளில் சொத்துக்களில் வாரிசு உரிமைக்காக அடிக்கடி சண்டை போடும் உடன்பிறப்புகளுக்கும், பெண்களுக்கு அவர்களை அடக்கி ஆளும் அவர்களின் கணவருக்கும், செவ்வாய் காரகர் ஆகின்றார். அதாவது ஆண், பெண் இருபாலருக்கும் சகோதர காரகராகவும், பெண்களுக்கு மட்டும் களத்திர காரகராகவும் செவ்வாய் உள்ளார். பெண்களுக்கு செவ்வாய் முக்கிய கிரகம் என்பதால் தான் திருமணப் பொருத்தத்தில் அவர்களின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலை முக்கியமாக கருதப்படுகின்றது.

        எனவே தைரியம், முன்கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம், மற்றவருக்கு கட்டுப்படாமை, புரட்சி செய்தல், உடல் வலிமையை பயன்படுத்துதல், மற்றவர்கள் படும் துன்பத்தை ரசித்தல், ரண வேதனையை உண்டாக்குதல் போன்றவற்றுக்கு செவ்வாய் காரகர் ஆவார்.  

        உடலில் வலிமையை நிர்ணயிப்பது தசைகளாகும்., எனவே தசைகளுக்கும், கட்டுமஸ்தான உடலுக்கும் செவ்வாய் காரகர் ஆவார். அதன்படி கராத்தே, குத்துச்சண்டை, மஞ்சு விரட்டு போன்ற வீரசாகசங்களுக்கும் செவ்வாயே காரகர் ஆவார். மேலும் வலிகளுக்கு காரகர் செவ்வாய் என்பதால் அறுவைச்சிகிச்சை, கடுமையான நோய்கள், கோர விபத்துக்கள், கொடுரமான மரணங்கள், கொலைகள், மற்றவர்களால் தண்டிக்கப்படுதல் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆவார்.

        மேலும் மன உளைச்சல், அமைதியின்மை, பதற்றம் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் என்பதால் கடன், வழக்கு, சண்டை, சச்சரவுகள், துரோகம், மற்றவர்களால் மிரட்டப்படுதல் (Block Mail), ஆயுதங்கள் வைத்திருத்தல், தீவிரவாதம், ஊழல் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆவார்.

        அதே நேரத்தில் எல்லா வகையான இயந்திரங்கள், பெரிய தொழிற்சாலைகள், கருவிகள், கட்டுமான தொழில்கள், கனரக வாகனங்கள், ஆபத்தான கொடிய விலங்குகள், முட்செடிகள், புதர்கள், கரடுமுரடான பாதைகள், செம்பு, பவளம், உணவு பொருட்களில் காரம் (மிளகாய் போன்றவை), தெய்வங்களில் முருகன் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.

        கிரகங்களில் செவ்வாய் அசுப தன்மையை கொண்டதாக கருதப்படுகின்றது.

புதன்

        புதன், சூரியனுக்கு அருகில் முதல் வட்டத்தில் உள்ள கோள் ஆகும். சூரியனிடமிருந்து சுமார் 5 கோடியே 76 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூரியனை புதன் சுற்றி வருகின்றது. புதன் தன்னைத்தானே 59 நாட்களில் சுற்றுகின்றது. சூரியனை 88 நாட்களில் சுற்றி வருகின்றது. புதனின் விட்டம் 4849 கிலோமீட்டர் ஆகும். நாம் வாழும் பூமியிலிருந்து சுமார் 9 கோடியே 24 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

        சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகவும் சிறிய கிரகம் புதன் ஆகும். சூரியனுக்கு அருகில் உள்ளதால் மற்ற கிரகங்களை விட விரைவில் சூரியனை புதன் சுற்றி வந்து விடும். எனவே சுறுசுறுப்புக்கும், விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் புதனே காரகர் ஆவார். இளைஞர்களும், குழந்தை பருவத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்பானவர்கள் என்பதால் இவர்களுக்கு காரகர் புதனே ஆவார்.

        புத்தி கூர்மை உடையவர்கள் சமயோசித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் விரைவாக முடிப்பார்கள். கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களை விட விரைவில் புதன் சுற்றி விடுவதால், புதன் புத்திகாரகர் என்று அழைக்கப்படுகின்றார். புத்தியுள்ளவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எனவே கல்விக்கு புதனே காரகர் ஆவார்.

        புத்தியுள்ளவர்கள் எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் நடுநிலையுடன் இருப்பார்கள். எனவே சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் காரகர் புதன் ஆவார். கல்விக்கு காரகர் புதன் என்றாலும் குறிப்பாக கல்வியில் மிகவும் நுட்பமானது (புரிந்து கொண்டால் மட்டும் பயன்படுத்தக் கூடியது) கணிதம் ஆகும். எனவே கணிதம், புள்ளி விபரம், காவியம், சிற்பம் போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகின்றார்.

        ஆசிரியர்கள் ஏற்கனவே ஏதோ ஒரு துறையில் முழுமை பெற்றவர்கள். மாணவர்கள் எப்போதும் அறிவை விருத்தி செய்து கொள்ள பல துறைகளையும் பயில்பவர்கள். எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்பவர்கள் புதனின் அம்சம் என்பதால் மாணவர்களுக்கும், விகட கவிகளுக்கும், சகல கலா கல்வி கற்றவர்களுக்கும், ஒரு விஷயத்தை சரியாக திட்டமிடுபவர்களுக்கும் சாணக்கியத் தன்மை உடையவர்களுக்கும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்பவர்களுக்கும் புதனே காரகர் ஆகின்றார்.

        சமயோசித புத்திக்கு புதன் காரகர் என்பதால், சூழ்நிலையை தனக்கு சாதகமாக உருவாக்கி கொள்ளும் நபர்களுக்கும், புதுமையை விரும்பும் நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும், ஜோதிடர்களுக்கும், தூதுவர்களுக்கும், ஒரே சமயத்தில் பல செயல்களை செய்பவர்களுக்கும், தசாவதானி, அஷ்டவதானி போன்றவர்களுக்கும் தரகு வேலை செய்பவர்களுக்கும் புதனே காரகர் ஆவார்.

        மேலும் விரைந்த செயல்களுக்கும் புதன் காரகர் என்பதால், எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைப்பேசி, தொலைக்காட்சி, பத்திரிகை, கம்ப்யூட்டர், நூல்கள், போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகின்றார்.

        மேலும் உடலில் விரைவாகச் செய்திகளை அனுப்பும் நரம்பு மண்டலங்களுக்கும், உணர்வு புலன்களுக்கும் புதனே காரகர் ஆவார். உறவுமுறைகளில் எல்லா உறவினர்களையும் அனுசரித்து (சமாதானமாக) செல்லும் உறவு மாமன் உறவு முறை ஆகும். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பெண் கொடுக்கல், வாங்கல் ஏற்படுத்தி கொள்ளலாம் என்பதால் மாமன் உறவுகள் மூலம் (திட்டமிடல், சமயோசித புத்தி) பெரும்பாலும் சண்டை, சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

        புதன் சமாதானம், திட்டமிடுதல் போன்றவற்றுக்கு காரகர் புதன் ஆவார். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மாமன் முறையான விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ கிருஷ்ண பகவான் புதனுக்குரிய தெய்வம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        மேலும் பொது அறிவு, தவணை முறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்தம், நிபுணத்துவம், இளவரசன், பல குரலில் பேசும் திறன், விகடகவி, பச்சை நிறம், ஒரு முறைக்கு இரு முறை செய்யும் இரட்டைத் தன்மை, இலக்கணப் புலமை, உலோகங்களில் பித்தளை போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகின்றார்.

        கிரகங்களில் புதன் சுபத்தன்மையை கொண்டதாக கருதப்படுகின்றது.

        குரு

        சூரியனுக்கு 5 வது வட்டத்தில் குரு உள்ளது. சூரியனுக்கு சுமார் 77 கோடியே, 28 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து கொண்டு சூரியனை சுற்றி வருகின்றது. இது தன்னை தானே 19 மணி 5௦ நிமிடத்தில் சுற்றுகின்றது. சூரியனை சுற்றி வர குருவுக்கு 12 ஆண்டுகள் ஆகும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப்பெரிய கோள் இதுதான். இதன் விட்டம் 141,968 கிலோமீட்டர் ஆகும்.

        சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்ற குரு என்பதால் குரு பெரிய மனிதத்தன்மைக்கு காரகர் ஆவார். அதாவது மற்றவர்களால் மதிக்கப்படுகின்ற அல்லது வணங்க கூடிய தன்மைக்கு குருவே காரகர் ஆவார். ஒருவர் மற்றவர்களால் மதிக்கப்படுகின்றார் அல்லது வணங்கப்படுகின்றார். எனில் அவர் உயர்ந்த குண நலன்களான சாந்தம், பண்பாடு, நீதி, நேர்மை, தர்ம சிந்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறருக்கு நல்ல ஆலோசனைகளை தருதல், மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை போன்ற குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் மேற்கண்ட விஷயங்களுக்கு நவகிரகங்களில் குருவே காரகர் ஆவார்.

        குரு என்றால் ஆசிரியர் அல்லது இறைவனைச் சுட்டி காட்டுபவர் என்று பொருள். எனவே ஆசிரியர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், தெய்வீக பணி செய்பவர்களுக்கும், ஞானிகளுக்கும் குருவே காரகர் ஆகின்றார். நவகிரகங்களிலேயே பேரின்பமான ஆன்மிகத்திற்கும் குருவே காரகர் ஆகின்றார். எனவே குருவிற்கு தேவகுரு என்றும் பெயர்.

        தான தர்மங்களுக்கு குரு காரகர் என்பதால், பொதுப்பணம் அதாவது பொது மக்களின் நலனுக்காக தனிப்பட்ட நபருக்கு சொந்தமில்லாத பெரிய அளவிலான பணம், அரசாங்கக் கருவூலம் (கஜானா), வங்கியில் உள்ள பணம் மற்றும் சிறிது கூட சங்கடமில்லாது தான தர்மங்களை செய்யும் பெரும் தனவான்கள் போன்றோர்களுக்கும் குருவே காரகர் ஆவார். எனவே குரு தனகாரகன் என்றும் நம் முன்னோர்களால் அழைக்கப்படுகின்றார். குறிப்பாக ஒரு குறிக்கும் தனம் என்பது மற்றவர்களுக்காக செலவு செய்யப்படவுள்ள பெரிய அளவிலான செல்வகுவியல் அல்லது பொதுப்பணம் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன். (தனி மனிதனுக்கு சொந்தமான பணம் அல்ல.)

        நவகிரகங்களில் குருவினுடைய காரகங்களில் அதிக அளவில் சுப காரகங்களே உள்ளன. அதே போல் குழந்தைகளுக்கு மனதில் எந்த வித வஞ்சகம், சூது, துரோகம் போன்றவை இல்லை என்பதாலும் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாலும், குருவை புத்திரகாரகன் (புத்திரம் என்றால் குழந்தை) என்று நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

        மேலும் தெய்வ அருள் இன்றி ஒரு உயிரினமும் உருவாக முடியாது. உதாரணமாக இன்று மருத்துவ விஞ்ஞானம் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இருந்தாலும் கூட இன்றும் குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டை விட தற்பொழுது அதிக அளவில் தான் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தெய்வீக சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் குருவே காரகர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ஜோதிடத்தில் மிகவும் அடிப்படை ஜோதிடமான நாடி ஜோதிடத்தில் குருவை ஜீவ காரகன் என்று முனிவர்கள் கூறி இருக்கின்றார்கள். ஜீவன் என்றால் உயிர் என்று பொருள்.

        ஆன்மிக விஷயங்களுக்கு மஞ்சள் நிறமே முக்கிய பங்கு வகிக்கும். எனவே தெய்வீக விஷயங்களுக்கு காரகரான குருவே மஞ்சள் நிறத்திற்கும் காரகர் ஆகின்றார். மேலும் எல்லா வித சுப (மங்கள) நிகழ்ச்சிகளுக்கும் குருவே காரகர். ஆண், பெண் இருவருக்கும் குரு களத்திர காரகனாக இல்லாவிட்டாலும் கூட குரு பலம் என்பது (கோட்சாரத்தில்) திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அவசியமான ஒன்று என்று பாரம்பரிய ஜோதிட முறையில் கருதப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

        உலோகங்களில் மஞ்சள் நிறத்தில் உள்ளதும், விலை உயர்ந்ததுமான (குரு தனகாரகன்) தங்கத்திற்கு குருவே காரகர் ஆகின்றார். குரு நேர்மைக்கு காரகர் என்பதால் சட்டம்-ஒழுங்கு, நீதிபதிகள், நீதிமன்றம், நேர்மையான சட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு குருவே காரகர் ஆவார்.

        பெரிய விஷயங்களுக்கு குருவே காரகர் என்பதால் உடலில் அதிக பகுதியை கொண்ட வயிற்றுப் பகுதிக்கும், வயிற்றில் உள்ள கல்லீரலிலுக்கும், உடலை பெரிதாக்கும் கொழுப்பு சக்திற்கும் குருவே காரகர் ஆகின்றார்.

        மேலும் பூர்வீகம், ஆச்சாரம் (சுத்தம்), பாரம்பரியம், புரோகிதம், மத நம்பிக்கை, கோவில், சாஸ்திர ஞானம், மந்திர உச்சாடனங்கள், கல்வி நிறுவனங்கள், பருத்த உடல், கருவூலம் (வங்கிகள்), தெய்வங்களில் தட்சிணாமூர்த்தி, விலங்குகளில் மிகப்பெரிய உருவம் கொண்ட யானை, ஆலோசனைகளை கூறுபவர்கள் போன்றவை குருவின் காரகங்களாகும்.

        கிரகங்களில் குரு சுபத்தன்மை கொண்டதாக கருதப்படுகின்றது.

        சுக்கிரன்

        சுக்ரன் சூரியனுக்கு 2 வது வட்டத்தில் உள்ளது. சூரியனிடமிருந்து சுமார் 1௦ கோடியே 75 லட்சத்து 2௦ ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் சுக்ரன் உள்ளது. சுக்ரன் தன்னை தானே 23 மணி 3௦ நிமிடத்தில் சுற்றுகின்றது. சூரியனை சுற்றிவர சுக்ரனுக்கு 225 நாட்கள் ஆகும். இதன் விட்டம் 12,௦32 கிலோமீட்டர்., ஆகும்.

        கிரகங்களில் குரு பேரின்ப காரகர் என்றால், அதற்கு நேர்மாறாக சிற்றின்ப விஷயங்களுக்கு சுக்ரனே காரகர் ஆவார். கிரகங்களில் சூரிய ஒளியை பெற்று அதை அப்படியே பிரதிபலித்து மற்ற கிரகங்களை விட அழகாக பிராகசிக்க கூடியது சுக்ரனே ஆகும். எனவே அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல் போன்றவற்றுக்கு சுக்ரனே காரகர் ஆகின்றார்.

        நாம் வாழும் பூமிக்கு ஒரு புறம் சுக்ரனும், அடுத்த புறம் செவ்வாயும் உள்ளது. செவ்வாயின் காரகங்களை ஏற்கனவே படித்தோம். செவ்வாயின் காரகங்களுக்கு கிட்டத்தட்ட நேர்மாறான காரகங்களே சுக்ரனின் காரகங்களாகும். இரு பாலினத்தில் ஆண்களை விட பெண்களிடத்தில் தான் அழகு, கவர்ச்சி, மென்மை போன்றவை அதிகம் (குறிப்பாக இளம் பெண்களிடத்தில்) என்பதால் சுக்ரன் பெண்களை குறிக்கும் காரகர் ஆகின்றார்.

        அதிலும் குறிப்பாக ஒரு ஆண் தன் மனைவியை அல்லது காதலியைத் தான் மேற்கண்ட கோணத்தில் ரசிக்க முடியும். தன் உடன் பிறந்த சகோதரிகளை ரசிக்க முடியாது. எனவே ஆண்களுக்கு சுக்ரனே களத்திர காரகன் ஆவார். பெண்களிடம் பெறும் இன்பத்திற்கு சுக்ரனே காரகர் ஆவார்.   

        அழகு, கவர்ச்சி என ஒருவரின் உணர்வுகள் தூண்டப்படும் போது அவர்களுக்கு உடல் உழைப்பில் ஆர்வம் குறைந்து இல்லற உறவு, கலை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் நாட்டம் செல்லும். எனவே மேற்கண்ட விஷயங்களுக்கும் எல்லா வித உடல் சுகங்களுக்கும் (ஆண், பெண் இருபாலருக்கும்), ஆடம்பரம், சொகுசு, பகட்டு, உல்லாசம் போன்ற மனதிற்கு இதமளிக்கும் அனைத்திற்கும் சுக்ரனே காரகர் ஆகின்றார்.

        குரு எப்படி தனகாரகனாக உள்ளாரோ அதே போல் அதற்கு அடுத்தப்படியாக சுக்ரனும் தனக்காரகன் ஆவார். ஒருவரிடம் உள்ள சொந்த பணத்திற்கும், பொன், பொருட்களுக்கும், கறுப்பு பணத்திற்கும், (பொதுப் பணம் என்றில்லாமல்) சுக்ரனே காரகர் ஆகின்றார். தன் சொந்த பணத்தை கொண்டுத்தான் ஒருவர் ஆடம்பரம், சொகுசு, பகட்டு, உல்லாசம் விஷயங்களுக்கு மகிழ்ச்சியாக செலவு செய்ய முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        தங்கத்திற்கு அடுத்த படியாக மனிதர்களால் பயன்படுத்தப்படும் விலை மதிப்புள்ள உலோகம் வெள்ளியாகும். எனவே வெள்ளிக்கு சுக்ரனே காரகர் ஆவார். அறுசுவைகளில் நம்மை மயக்கும் இனிப்பு சுவைக்கு காரகரும் சுக்ரனே ஆவார்.

        சூரியக் குடும்பத்தில் உள்ள சுக்ரனை தவிர மற்ற எல்லா கோள்களும் இடமிருந்து வலமாக (மேற்கிலிருந்து கிழக்காக)தன்னைத்தானே சுற்றி வருகின்றது. ஆனால் சுக்ரன் மட்டும் விதி விலக்காக வலமிருந்து இடமாக தன்னைத்தானே சுற்றி வருகின்றது.  எனவே தான் மற்ற எல்லா கிரகங்களின் காரகங்களில் இருந்து சுக்ரனின் காரகங்கள் வேறுபட்டு ஒரு சில போலியான காரகங்களை தனக்குள் வைத்துள்ளது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு சுக்ரனின் காரகங்கள் புத்துணர்ச்சியூட்டி புது தெம்பளிக்கின்றது என்பதையும் இங்கு மறுக்க முடியாது. அதனால்தான் இயற்கையும், ஒரு நாளைக்கு 3-ல் ஒரு பங்கு உறக்கத்திற்காக (ஓய்வு) மனிதனுக்கு இரவு என்ற நேரத்தை (சுமார் 8 மணி நேரம்) தந்திருக்கின்றது.

        சுக்ரன் பாலின இன்பங்களுக்கு காரகர் என்பதால் ஆண், பெண் உறவுகளின் போது வெளிப்படும் விந்து, சுரோணிதம் இவற்றுக்கு சுக்ரனே காரகர் ஆவார். ஆண், பெண் பாலின வேறுபாடுகளை (இனக்கவர்ச்சி) ஒருவருடைய உடலில் உள்ள ஹார்மோன்கள் நிர்ணயிக்கும். எனவே ஹார்மோன்களுக்கும் சுக்ரனே காரகர் ஆகின்றார்.

        மேலும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, கள்ளத் தொடர்புகள், ஆடம்பர பொருட்கள், இன்பங்களை நுகருதல், மற்றவர்களை மயக்கும் கலைஞர்கள், விபச்சாரிகள், ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், சொகுசு மாளிகைகள், இயல், இசை, நாடகங்கள், நடனங்கள், உறவு முறையில் மனைவி, உயர் ரக மதுபான வகைகள், வைரம், தெய்வங்களில் மகாலக்ஷ்மி போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.

        கிரகங்களில் சுக்ரன் சுபத்தன்மை கொண்டதாக கருதப்படுகின்றது.

        சனி

        சனி,சூரியனுக்கு 6வது வட்டத்தில் உள்ளது. சூரியனிலிருந்து சுமார் 141 கோடியே 76 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சனி தன்னை தானே 1௦ மணி 14 நிமிடம், 24 நொடிகளில் சுற்றுகின்றது. சூரியனை ஒருமுறை சுற்றிவர சனிக்கு 29.5 ஆண்டுகள் ஆகும். சனியின் விட்டம் 1,19,296 கிலோமீட்டர் ஆகும்.

        நவகிரங்களிலேயே தொலைவில் உள்ள கிரகம் சனி கிரகம் ஆகும். எனவே மற்ற கிரங்களை விட சூரியனை சுற்றி வர சனிக்கு அதிக காலம் தேவைப்படுகின்றது. எனவே கால தாமத்திற்கு காரணமான சனிக்கு மந்த காரகர் என்று பெயர். மந்தமாக செயல்படும் சோம்பேறிகளுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கும், வயதான நபர்களுக்கும், கிழத்தோற்றம் உடைய நபர்களுக்கும் சனியே காரகர் ஆகின்றார்.

        எல்லா விஷயங்களையும் சனி காலதாமதப்படுத்துவார். குறிப்பாக உடலை விட்டு உயிர் பிரியும் சனி தாமதப்படுத்தும் என்பதால் சனிக்கு ஆயுள் காரகர் என்று பெயர்.

        சனி சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் சூரியனின் ஒளி சனிக்கு கிடைப்பதில்லை. எனவே சனி இருட்டு என்பது கரிய நிறம் என்பதால் கரிய நிறத்திற்கு காரகர் ஆவார். இருட்டில் எந்தப் பொருளையும் சரியாக பார்க்க முடியாது. சனி மந்த கிரகம் என்பதால் விரைவில் மற்றாங்களை வாழ்க்கையில் உருவாக்க இயலாத, பிறந்தது முதல் கடைசி வரை ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்தில் அனைவருக்கும் தெரியாத (இருட்டு) அடித்தட்டு மக்களுக்கும் சனியே காரகர் ஆவார்.

        அடித்தட்டு மக்கள், மற்றவருக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவும், அழுக்கு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் (கருப்பு நிறமும் அழுக்கினை குறிக்கும்), மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயந்படுத்துபவர்களாகவும், ஆளும் வர்க்கத்தினரை எளிதில் காண முடியாதவர்களாகவும், காண உழைப்பவர்களாகவும் (சூரியன் அரசனை அல்லது ஆளுபவர்களை குறிக்கும். சூரியனிலிருந்து சனி தூரத்தில் உள்ளதால்) இருப்பார்கள். எனவே அடிமைகள், கடைநிலை ஊழியர்கள், வேலைக்காரர்கள், மற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்கள், தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, அழுக்கு, கழிவு பொருட்கள், ஏழ்மை, கடின உழைப்பு போன்றவற்றுக்கு சனியே காரகர் ஆவார்.

        ஒரு பொருளை அபகரிக்க (திருட) இரவு நேரம் அதாவது இருட்டு என்பது சாதகமான ஒன்று. வெளிச்சத்தை விட இருட்டில் தான் குற்றங்கள் அதிகம் நடைபெறும். எனவே திருடர்களை அதிலும் குறிப்பாக சிறிய அளவில் திருடுபவர்களுக்கு சனியே காரகர் ஆவார்.

        கடின உடல் உழைப்பு மற்றும் வேலைக்காரர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொழிலை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் சனிக்கு தொழில் காரகன் என்று பெயர். எந்த ஒரு தொழிலுக்கும் உழைக்கும் மக்களின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிகாரம் இல்லாத சீருடை அணிந்த கீழ்நிலை ஊழியர்களுக்கு (ஆபீஸ் பாய், வாட்ச்மேன், வீட்டு வேலைக்காரர்கள் போன்றவர்கள்) சனியே காரகர் ஆவார்.

        இதுவரை கவனித்ததில் சனியின் காரகங்களில் மகிழ்ச்சியை குறிக்கும் காரகங்கள் எதுவும் இல்லை. எனவே சனி துக்கங்களுக்கும், வலி வேதனைகளுக்கும், இறப்பிற்கும் காரகராகின்றார். எனவே அசுப நிகழ்ச்சிகளுக்கு சனியின் நிறமான கருப்பு நிறத்தில் உடை அணிந்து தங்களுடைய மன வருத்தங்களை சம்மந்தப்பட்டவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

        மேலும் உலோகங்களில் கருப்பு நிறம் கொண்டதும், தொழில்களுக்கு அதிகம் பயன்படுவதுமான இரும்பும் சனியின் காரகமே ஆகும். உடலில் தோல் பகுதிகள் எளிதில் வியர்வை மூலம் அழுக்கு ஆவதால் தோலுக்கும், கரிய நிறமான முடிக்கும், உடலில் உள்ள எல்லா கழிவு பொருட்களுக்கும் சனியே காரகராகின்றார்.

        சூரிய வெளிச்சம் இல்லாமல் எந்த உயிரினமும் உருவாக முடியாது. சனியில் சூரிய வெளிச்சம் மிகவும் குறைவு என்பதால் ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கும் சனியே காரகர் ஆவார்.

        மேலும் இரவு வேலை, பொய், கஞ்சத்தனம், சில்லரை, வறுமை, ஊனம், ஏமாறுதல், ஏக்கம், அமைதியான வீட்டு விலங்குகள், தாழ்ந்த ஜாதி, பக்கவாதம், விடா முயற்சி, விவேகம், இழப்பு, தத்துவம், தன்நிலை தாழ்தல், நீலக்கல், தெய்வங்களில் அய்யனார் போன்ற நீச்ச தெய்வங்கள் போன்றவைகளுக்கும் சனியே காரகர் ஆவார்.

கிரகங்களில் சனி அசுபத் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றது.

        ராகு   

        ராகு    என்பது ஒரு கோள் (அல்லது) துணை கோளாக இல்லை. இது நிழல் கிரகம். பூமியின் நிழல் ராகு என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.

        ராகுவின் பெரும்பாலான காரகங்களை சனியின் காரகங்களை போன்றே நம் முன்னோர்கள் கொடுத்துள்ளனர். தசா காலம் கூட சனியை போன்றே ஏறக்குறைய ராகுவிற்கும் நம் முன்னோர்கள் கொடுத்துள்ளனர். (சனி திசை 19 வருடம், ராகு திசை 18 வருடம்.)

        ராகு நிழல் கிரகம் என்பதால், கண்ணுக்குப் புலனாகாத ஆவிகள், பேய், பிசாசுகள், மாந்திரீகம், செய்வினை போன்றவை ராகுவின் காரகங்களாகும். மேலும் எதையும் பெரிதுப்படுத்துவதை ராகுவின் காரகமாக நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள். எனவே பிரமாண்டம் அல்லது விகாரம் என்பது ராகுவின் காரகங்களாகும். பேய், பிசாசுகள் போன்றவைகள் விகாரமானவைகளாக சித்தரிக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        ராகு, கேதுவை பாம்பின் அம்சமாக மரபு ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. அதாவது விஷ ஜந்துக்கள் ஒருவரை தீண்டுவதால் விஷம் அவருடைய உடலில் பரவி அவருக்கு மரணத்தை கூடத் தரும். பொதுவாக எல்லா வித விஷங்கள், உடலை கெடுக்கும் விஷ உணவுகளுக்கும் ராகுவையே காரகமாக கொள்ளலாம்.

        ஒருவருடைய மனதை விகாரப்படுத்தி, அவனை அகங்காரம் கொண்டவனாக ஆக்குவது மது மற்றும் போதை பொருட்களாகும். மது மற்றும் போதை பொருட்கள் விஷத்தன்மை கொண்டது என்பதை இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        ராகுவும், சனியை போன்று இருட்டு (நிழல்) கிரகம். சூரிய ஒளி இன்றி எந்த உயிரினமும் தோன்ற முடியாது. எனவே ராகுவும் மலட்டுத் தன்மைக்கு காரகராகின்றார். ராகு மனதை விகாரப்படுத்தும் காரகத்தை கொண்டிருப்பதால் சமுதயாத்திற்கு பொருந்தாத உறவுகளான ஓரினச் சேர்க்கை, கூட்டுக்கலவி, இரத்த பந்தங்களுக்கிடையே தகாத பாலின உறவுகள் போன்றவற்றுக்கு ராகுவே காரகமாகும்.

        ராகு பிரமாண்டம் என்பதால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும் கிரக காரகர் ஆவார். எனவே வெளிநாட்டையும், அந்நிய மதங்களையும், அந்நிய மொழிகளையும் ராகுவே குறிப்பார். ராகு நிழல் கிரகம் என்பதால் போட்டோ, சினிமா, மின்சாரம் போன்றவற்றுக்கும் ராகுவே காரகர் ஆவார்.

        சாதாரண அல்லது சிறிய அளவில் உள்ள திருட்டுகளுக்கு சனி காரகர் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். சனியை போன்றவர் ராகு என்பதால் சனியின் காரகமான திருட்டை பெரிய அளவில் செயல்படுத்தும் பெருங்கொள்ளை, கடற்கொள்ளை, ஆட்கடத்தல், வெளிநாட்டு சதி போன்றவற்றுக்கு ராகுவே காரகர் ஆவார்.

        மரணத்திற்கு காரகர் சனி ஆவார். சனியை போன்றவர் என்பதால் இயற்கை சீற்றத்தால், அல்லது பேருந்து, புகைவண்டி போன்றவற்றில் ஏற்படும் பிரமாண்ட கூட்டு மரணங்களுக்கும் ராகுவே காரகர் ஆவார். உலகியல் ஜோதிடத்தை ஆய்வு செய்யும் போது கூட்டு மரணங்கள் ராகுவின் கோட்சாரத்தை கொண்டே அமைகின்றது.

        மேலும் சிறைச்சாலை, உடலில் உள்ள சுவாசம், அலர்ஜியால் உடலில் ஏற்படும் தடிப்புகள் (விகாரம்), அகன்ற பாத்திரங்கள், வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, எதையும் மிகைப்படுத்திச் சித்தரித்தல், மோசடி வித்தைகள், வழக்கத்திற்கு மாறான செய்கைகள், புற்றுநோய், மூதாதையர்கள், தாத்தா, பாட்டி தெய்வங்களில் துர்க்கை, இரத்தினங்களில் கோமேதகம் போன்றவை ராகுவின் காரகங்களாகும்.

        கிரகங்களில் ராகு அசுப தன்மை கொண்டதாக கருதப்படுகின்றது.

        கேது  

        ராகுவை போல் கேதுவும் ஒரு நிழல் கிரகம் ஆகும். சந்திரனின் நிழல் கேது என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.

        ராகு எப்படி கிட்டத்தட்ட சனியை போன்று அதனுடைய காரகங்களை கொண்டுள்ளதோ அதே போல் கேது, செவ்வாயை போன்று அதனுடைய காரகங்களை கொண்டுள்ளது. கேதுவின் தசாக்காலமும் (7 வருடம்) செவ்வாயின் தசாக்காலமும் ஒரே அளவை கொண்டது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        கேதுவின் காரகங்கள் (பெரும்பாலும்) ராகுவின் காரகங்களை போன்றே இருந்தாலும் சில விஷயங்களில் நேர் எதிராக உள்ளது. ராகு எதையும் பெரிதுப்படுத்துவது, பிரமாண்டப்படுத்துவது அல்லது விகாரப்படுத்துவது என்றால் கேதுவின் காரகம் என்பது எதையும் சிறியதாக்குவது, சிதைப்பது மற்றும் துண்டிப்பது போன்ற காரகங்களை கொண்டுள்ளது.

        அதாவது ராகு, கேதுவை பாம்பின் அம்சமாக ஏற்கெனவே பார்த்தோம். இதில் தலைப்பகுதியை ராகுவாகவும் (பிரமாண்டம்) வால் பகுதியை (சிறுத்துள்ளதை) கேதுவாகவும் கொள்ளலாம். பாம்பின் வாலைப்போல் சிறுமைப்படுத்துவது கேதுவின் காரகம் ஆகும்.

        தன்னை பெரிதுப்படுத்தி தான் என்ற அகங்காரத்தை தருவது ராகு என்றால் தன்னை சிறிதுப்படுத்தி எல்லாம் அவர் (இறைவன்) செயல் என்று தன்னடக்கத்துடன் இருப்பது கேதுவின் காரகம் ஆகும். எனவே தான் கேதுவை ஞானக்காரகன் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

        ராகுவை போன்று கேதுவும் விஷங்களையும், போதை பொருட்களையும் குறிக்கும் காரகர் ஆவார். குறிப்பாக போதை பொருட்களில் அபின், கஞ்சா போன்றவை கேதுவின் காரகங்களாகும். இவை சிறிய அளவு உட்கொண்ட உடன் உடனடியாக ஒருவர் தன்னுடைய நிலையை மறந்து விடுவார். ஆனால் விஸ்கி, பிராந்தி போன்ற மதுபானங்களை உட்கொண்டவர்கள் தன்னை வெளிப்படுத்தி கொண்டு (ஆணவம், அகங்காரம்) பேசி கொண்டிருப்பார்கள்.

        அதாவது ஒருவர் தன்னை வெளிப்படுத்தி கொள்வதை ராகுவின் காரகம் என்றும், தன்னை வெளிக்காட்டாமல் மறைந்து இருப்பது கேதுவின் காரகம் என்றும் வாசகர்களுக்கு கூற விரும்புகின்றேன். எனவே தன்னடக்கத்துடன் இருக்கும் முற்றும் துறந்த முனிவர்கள் கேதுவின் அம்சம் ஆகும்.

        உடைப்பது, சிதைப்பது, துண்டிப்பது, அரிப்பது என்பது கேதுவின் காரகம் என்பதால் நாட்டை சீர்குலைப்பவர்களுக்கும், கலககாரர்களுக்கும், மிரட்டல் விடுபவர்களுக்கும், வெடிகுண்டு, பட்டாசு, ஜல்லி, அமிலம் எல்லாவித சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கும், எல்லாவித தடைகளுக்கும் கேதுவே காரகர் ஆவார்.

        அகன்ற பாத்திரங்களை ராகு குறிக்கும். இதற்கு நேர்மாறான மெல்லிய திரவப்பொருளை எடுத்து செல்லும் குறுகிய குழாய்களுக்கும், கம்பிகளுக்கும், நார்களுக்கும், கயிறுகளுக்கும், உடலில் உள்ள குடல்களுக்கும், குறுகிய பாதைகளுக்கும் (ஒற்றையடிப்பாதை), சந்துக்களுக்கும், கேதுவே காரகர் ஆவார்.

        ராகுவை போன்றே கேதுவும் இருட்டு (நிழல்) கிரகம் என்பதால், சனி, ராகுவை போன்றே கேதுவும் மலட்டு தன்மை அல்லது அலி தன்மை கொண்ட கிரகமாக கருதப்படுகின்றது. தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது கேதுவின் காரகம் என்பதால், ரகசிய சதிவேலைகள், புலனாய்வு துறைகள் போன்றவற்றுக்கு கேதுவே காரகர் ஆவார்.

        மேலும் ஏழ்மை, மத நம்பிக்கை, தத்துவ ஞானம், மோட்சம், வேதாந்தம், மனோபலம், தனிமையில் இருத்தல், தவம், புண்கள், இரணங்கள், உடலில் உள்ள அமிலம், மருத்துவம், மௌன விரதம், பில்லி சூனியம், மாந்திரீகம், ஆவியுலகத் தொடர்புகள், பிரிவினை வாதம், விவாகரத்து, எளிதில் கண்டுபிடிக்க முடியாத போலிகள், குறுக்கு வழி, நெருக்கடிகள், தெய்வங்களில் விநாயகர், நவரத்தினங்களில் வைடூரியம் போன்றவை கேதுவின் காரகமாகும்.

        கிரகங்களில் கேது அசுப தன்மை கொண்டதாக கருதப்படுகின்றது.

இயற்கை சுபர், இயற்கை அசுபர்

        கிரகங்களில் சூரியன், புதன், குரு மற்றும் சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் தங்களுடைய காரகங்களில் பெரும்பாலும் சுப தன்மைகளையே அதிகம் வைத்துள்ளதால் இந்த நான்கு கிரகங்களும் பொதுவான நிலையில் இயற்கை சுபர்கள் ஆவார்கள்.

        கிரகங்களில் செவ்வாய், சனி என்ற இரண்டு கிரகங்களின் காரகங்கள் பெரும்பாலும் வலி, வேதனை என்று அசுப தன்மைகளையே அதிகம் வைத்துள்ளதால் இந்த இரண்டு கிரகங்களும் பொதுவான நிலையில் அசுப கிரகங்கள் ஆகும். சனியை போன்று ராகுவும், செவ்வாயை போன்று கேதுவும் செயல்படுவதால் ராகு, கேதுவும் பொதுவான நிலையில் அசுப கிரகங்கள் ஆகும்.

        ஆகையால் சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகிய நான்கு கிரகங்களும் இயற்கை சுபர்கள் அல்லது பாபர்கள் ஆவார்கள்.

        சந்திரன் மேற்கண்ட நிலையில் இருந்து சற்று மாறுபட்டு சுபத் தன்மையும் (வளர்பிறைச் சந்திரன்), அசுபத் தன்மையும் (தேய்பிறைச் சந்திரன்) கலந்த நிலையில் உள்ள கிரகமாகும்.

        மேற்கண்ட செய்திகளை ஒரு பொது விதியாக மட்டுமே நாம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய காரக தன்மையை (சுப தன்மை அல்லது அசுப தன்மை) அது தொடர்பு கொண்ட பாவங்களுக்கு ஏற்ப பெருமளவு மாற்றி கொள்ளும் என்பதையே தனி நபரின் ஜாதக பலனுக்கு பயன்படுத்த வேண்டும்.

        அதாவது பாவங்களின் காரக பலனையே கிரகங்கள் தங்களின் கிரக காரகங்கள் மூலம் நிறைவேற்றுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

        “ சார ஜோதிட முறையில்” எந்த கிரகத்தையும் சுபராகவோ, அல்லது அசுபராகவோ சிறிது கூட கருதக்கூடாது. ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் எந்த எந்த பாவகங்களை தொடர்பு கொண்டிருக்கின்றதோ அந்த அந்த பாவ பலனையே செய்யும் என்பது தான் சார ஜோதிடத்தின் தந்தையும், அடியேனின் மானசீக குருவுமான பேராசிரியர் K.S. கிருஷ்ணமூர்த்தி போன்றோர்களின் கருத்து.

        இதிலிருந்து அடியேனின் கருத்து மிகச்சிறிய அளவில் மாறுபடுகின்றது என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன். எல்லா கிரகமும் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் எந்த பாவங்களைத் தொடர்பு கொள்கின்றதோ அந்த தொடர்பு கொண்ட பாவங்களின் பலனைத் தான் செய்யும் என்பதில் அடியேனுக்கு சிறிதும் மாற்று கருத்து இல்லை.

        மேற்கண்ட தொடர்பு கொண்ட பாவங்கள் லக்னத்திற்கு 8, 12ம் பாவங்கள் எனில் அந்த கிரகம் மூலம் பல இன்னல்களை ஜாதகர் அனுபவிப்பார். (அது இயற்கை சுபராகவே இருந்தாலும் கூட), சுப கிரகம் 8, 12ம் பாவ பலனை நடத்துவதற்கும் நிச்சயம் சிறிதளவாவது வேறுபாடு உண்டு என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

        உதாரணமாக ஒருவருக்கு குரு 8, 12ம் பாவங்களையும், அதே நேரத்தில் செவ்வாயும் 8, 12ம் பாவங்களையும், தொடர்பு கொண்டுள்ளதாக கொள்வோம். மேற்கண்ட இரண்டு கிரகங்களும் ஜாதகருக்கு தீமையை செய்யும் கிரகங்கள் ஆகும்.

        ஆனால் குருவினால் வரும் கெடுபலனை விட செவ்வாய் மூலம் வருகின்ற கெடுபலன் சற்று அதிகமாக இருக்கும். (சுமார் 20% ஆவது அதிகம் இருக்கும்.) ஒரு மாணவன் ஆசிரியரிடம் (குரு) அடி வாங்குவதற்கும், ஒரு போலிஸ்காரரிடம் (செவ்வாய்) அடி வாங்குவதற்கும் வேறுபாடு எந்த அளவு இருக்கும் என்பதனை வாசகர்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

        இதையே வேறு ஒரு உதாரணம் கொண்டு விளக்குகின்றேன். ஒருவரின் ஜாதகத்தில் குரு, 2, 1௦ம் பாவங்களையும், சனி, 2,1௦ம் பாவங்களையும், தொடர்பு கொண்டிருப்பதாக கொள்வோம். மேற்கண்ட 2பாவங்களும் ஜாதகருக்கு பொருளாதாரத்தை அள்ளி தரும் பாவங்கள் ஆகும்.

                        2,1௦ம் பாவங்களையும், தொடர்பு கொண்ட குருவினால் கிடைக்கும் பொருளாதாரம் மொத்தமாக ஒரே நேரத்தில் கிடைக்கும். ஆனால் 2,1௦ம் பாவங்களையும், தொடர்பு கொண்ட சனியினால் கிடைக்கும் பொருளாதாரம் சிறிது சிறிதாக தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும். கடைசியில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குருவின் மூலம் கிடைத்த பொருளாதாரமும், சனியினால் கிடைத்த பொருளாதாரமும் சம அளவினையே கொண்டிருக்கும்.

        குருவும்,சனியும் 2,1௦ம் பாவ காரகங்களை செயல்படுத்தினாலும் இவர்கள் செயல்படுவதில் எப்படி வேறுபடுகின்றார்கள் என்பதை கவனிக்கவும்.

        இதனை மேலும் ஒரு உதாரணம் கொண்டு விளக்குகின்றேன். மாநகரத்திற்குள் பல நிறுத்தங்களில் நின்று செல்லும் மாநகர பேருந்தின் (City Bus) நடத்துனர் (Conductor) ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக சுமார் 15௦௦ நபருக்கு பயணச்சீட்டை கொடுத்து கொண்டிருக்கும் பணியில் இருப்பதாக கொள்வோம். இவரது தொழில் சனியின் காரகம் என இங்கு உதாரணமாக கொள்ளலாம்.

        அதே நேரத்தில் சுமார் 5௦௦ கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையில் செல்லும் 2 அல்லது 3 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் (Point to point) விரைவு பேருந்தின் நடத்துனர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1௦௦ நபருக்கு மட்டும் பயணச்சீட்டை கொடுத்து கொண்டிருக்கும் பணியில் இருப்பதாக கொள்வோம். இவரது தொழில் குருவின் காரகம் என இங்கு உதாரணமாக கொள்ளலாம்.

        மேற்கண்ட இரண்டு நடத்துனரின் ஒரு நாள் பயணச்சீட்டின் வசூல் ஒரே அளவை கொண்டதாக இருந்தாலும், சனியின் காரகமான மாநகர பேருந்தின் நடத்துனர் 2 ரூபாய், 3 ரூபாய் என பயணச்சீட்டை அடிக்கடி கிழித்து கொடுத்து உடல், மனரீதியாக சற்று சிரமப்படுகின்றார் என்பதை வாசகர்கள் இங்கு கவனிக்க வேண்டுகின்றேன்.

        அதே நேரத்தில் குருவின் காரகமான விரைவு பேருந்தின் நடத்துனர் 1௦௦ ரூபாய், 2௦௦ ரூபாய் என பயணச்சீட்டை ஒரே நேரத்தில் கிழித்து கொடுத்து, நீண்ட நேரத்திற்கு பிறகு தான் அவ்வப்போது தனது பணியை செய்கின்றார் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        கிரகங்களில் இயற்கை சுபர், இயற்கை அசுபர் என்பதை முழுவதுமாக உயர் கணித சார ஜோதிடர்கள் நிராகரிக்க கூடாது என்பதை குறிப்பிடவே அடியேன் மேற்கண்ட உதாரணங்களை கூறினேன்.

        மேற்கண்ட கருத்துக்களின் படி உதாரணமாக சுப கிரகங்கள் ஜாதகருக்கு பொருளாதார ரீதியில் நன்மையை தரும் விதத்தில் இருக்குமானால் ஜாதகருக்கு எந்தவித சிரமத்தையும் தராமல் பொருளாதாரத்தை உயர்த்தும். அசுப கிரகங்கள் ஜாதகருக்கு பொருளாதார ரீதியில் நன்மையை தரும் விதத்தில் இருக்குமானால் ஜாதகருக்கு மிக குறைந்த அளவாவது மன உளைச்சலையும், உழைப்பையும் தந்து பொருளாதாரத்தை உயர்த்தும்.

        சுருக்கமாக கூறினால் பாவங்களின் காரகங்களுக்கும் செயல்பாட்டிற்கும் சார ஜோதிடத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பாவகாரகத்தினை செயல்படுத்துவது கிரகங்கள் தான்.

        ஒவ்வொரு பாவங்களின் காரகத்தையும் கிரகங்கள் செயல்படுத்தும் போது தங்களின் (கிரகங்களின்) காரக ரீதியாகவே பாவகாரகங்களை கிரகங்கள் செயல்படுத்தும் வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

        5. 12 பாவங்களின் காரகங்கள்

        காரகங்களை ஜோதிடத்தில் சரியான முறையில் பயன்படுத்தி பலன்களை கூறினால் பலன்கள் துல்லியமான முறையில் அமையும். கிரகங்களின் தன்மைகளை கிரக காரகம் என்றும், பாவங்களின் தன்மைகளை பாவ காரகம் என்றும் இரு வகையான காரகங்களை ஜோதிடத்தில் பயன்படுத்துகின்றோம். இதில் பாவ காரகம் கிரக காரகத்தை விட வலிமையானது. பாவகாரகத்துவத்தின் தன்மைக்கேற்ப தான் கிரக காரகத்தை பயன்படுத்த வேண்டும்.

        அதாவது சுருக்கமாக கூற வேண்டும் என்றால் பாவ காரகத்தை விதி எனவும், கிரக காரகத்தை மதி (தசா-புத்திகள்) எனவும் கொள்ளலாம். அதாவது விதி என்பது ஒரு செயலுக்கு எந்த அளவு வரையறுத்துள்ளதோ அதன் அளவுக்கு கட்டுப்பட்டே மதி என்ற தசா-புத்திகள் பலன் தரும் என்பது நமக்கு தெரியும். அதே போல் கிரக காரகம், பாவ காரகத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னுடைய பலனை தரும். பாவ காரகத்தையும், கிரக காரகத்தையும் எப்படி பயன்படுத்துவது என்பதே நம் ஆய்வின் நோக்கம் ஆகும்.

        பாவம் என்பதையும், ராசி என்பதையும் சிலர் ஒன்றாக நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் இது முற்றிலும் தவறு. ராசி என்பது கால புருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு 3௦ பாகை இடைவெளியில் ரிஷபம், மிதுனம் என மீனம் வரையிலுள்ள 12 ராசிகளின் பொதுவான கணக்கீடு ஆகும். ஒரு ராசிக்கும் சமதூர இடைவெளியை (3௦) ராசி கொண்டுள்ளது.

        ஆனால் பாவம் என்பது ஒவ்வொரு அட்சாம்சம், ரேகாம்சம்இவைகளினால் வேறுபடுகின்றது. அதாவது பாவம் ஒவ்வொரு இடத்தை பொருத்தும் மாறுபடுகின்றது. குறிப்பாக பிளசீடியஸ் (Placidus) முறைப்படி பாவங்களின் ஆரம்பமுனைகள் பிரிக்கப்படும் போது நீண்ட ராசி, குறுகிய ராசி என்ற வேறுபாடுகளாலும், பிறந்த இடத்தின் அட்சாம்சம், இவைகளினாலும் ஒவ்வொரு பாவமும் சம அளவு (3௦ பாகை) கொண்டதாக அமைவதில்லை.

        அதாவது ராசி என்பது பொதுத்தன்மை வாய்ந்தது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரே பலனை தெரிவிக்கும். ஆனால் பாவங்கள் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தவர்களுக்கு கூட பாவங்கள், தங்களின் ஆரம்ப முனைகளின் மூலம் முற்றிலும் வேறுபட்ட வெவ்வேறு பலனை காட்டும்.

        எனவே தான் ஒவ்வொரு பாவமும் தங்களின் ஆரம்ப முனைகள் மூலம் வேறு சில ஆரம்ப முனைகளை தொடர்பு கொண்டு விதியை அளவிட முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது பாவங்கள்தான் (தங்களின் ஆரம்ப முனைகள் மூலம்) ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தவர்களுக்கும் கூட இரு வேறுபட்ட பலனை நிர்ணயிக்கின்றது.

        அப்படி எனில் ஜோதிடத்தில் ராசி என்பதை எதற்குத் தான் பயன்படுத்துவது என்பதை வாசகர்களாகிய உங்களுக்கு விளக்குவது என்னுடைய கடமை. 12 ராசிகள் என்பது நிலையான 3௦ டிகிரிகள் கொண்ட ஒரு கற்பனையான கட்டம் ஆகும். ஒவ்வொரு ராசிக்கும் நிலையான காரகங்களை நம் முன்னோர்கள் நமக்கு தெளிவான முறையில் விவரித்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு ராசியிலும் உள்ள மூன்று வெவ்வேறு நட்சத்திரங்களுக்கு அதன் அதிபதியின் காரகங்களை கொண்டும் நாம் அறிந்து கொள்ளலாம். இது ஜோதிடத்தின் அடிப்படை நியதியாகும்.


புத்தகத்தின் பெயர் : கொடுப்பினையும் தசபுக்திகளும் 

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்

மேற்கண்ட புத்தகத்தை பெற: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 400/- 

Google pay : 9445721793


For more Details:


2.Youtube: https://www.youtube.com/user/astrodevaraj
3.Facebook: https://www.facebook.com/groups/stell ...



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக